பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் திருச்செங்கோட்டில் ஒருவர்
ரூ.246 கோடி வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அவர் 45 சதவீதம் வரி செலுத்த
சம்மதம் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த பழைய 500, 1000 ரூபாய்
நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர்
நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார்.
மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000
ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும்
அவர் தெரிவித்தார். அதன் பின்னர் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மிகுந்த
சிரமத்திற்கு இடையே வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதையடுத்து புதிய 500
மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில்
விடப்பட்டது.
இதனிடையே வங்கிகளில் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக ரூ.1,000, ரூ.500
நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விரிவான கணக்கெடுப்பை, மத்திய
வருமான வரித்துறை மேற்கொண்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும்,
புதுச்சேரியிலும் கணக்கில் காட்டாத பணம் ரூ.600 கோடி அளவுக்கு வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இப்படி
கணக்கில் காட்டாத பணம் வங்கிகளில் பெருமளவு டெபாசிட் செய்யப்பட்டிருப்பது
கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல்லைச் சேர்ந்தவ ஒருவர், இந்தியன்
ஓவர்சீஸ் வங்கிக் கணக்கில் ரூ.246 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.
இதுபற்றி தெரியவந்ததும், அவரை வருமான வரித்துறையினர் கண்காணித்து வந்தனர்.
நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த அந்த நபர், இறுதியாக, வருமான
வரித்துறையினரிடம் பிடிபட்டார். அவரை விசாரித்தபோது, இவை அனைத்தும்
தொழில்ரீதியாகக் கையிருப்பில் வைக்கப்பட்ட பணம் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, பிரதான் மந்திரி காரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ்,
டெபாசிட் செய்த பணத்தில், 45 சதவீதம் தொகையை வரியாகச் செலுத்த அவர் ஒப்புக்
கொண்டுள்ளார்.
மேலும், இதுபோன்றே கணக்கில் வராத பணத்தை, டெபாசிட் செய்த நபர்களை தொடர்ந்து
கண்காணித்து, வரி வசூலிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே 28000 வங்கிக் கணக்குகளில்
முறைகேடான பணம் அதிகளவில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து
வரி வசூலிப்பதோடு, தேவைப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment