தமிழகத்தை ஆளும் அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ளதால் உள்ளாட்சித்
தேர்தலில் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல்
ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டது.
ஒன்று சசிகலா அணி, மற்றொன்று தீபா அணி. இதைத் தொடர்ந்து சசிகலா அதிமுக
பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையை ஏற்க விரும்பாத
முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் ஜெயலலிதா
தோற்றத்தில் உடைய தீபா பக்கம் சாய்ந்தனர்.
இந்நிலையில் சசிகலா தரப்பினர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் பொறுமையாக இருந்த
ஓ.பன்னீர் செல்வம் திடீரென ஒரு நாள் இரவு பொங்கி எழுந்தார். சசிகலாவுக்கு
எதிராக தன்னை கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக
புகார் கூறி, தமிழக மக்களின் மனதையும், தொண்டர்கள் ஆதரவையும் பெற்றார்.
அணி தாவல்
இதைத் தொடர்ந்து பொதுமக்கள், தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு
உள்ளது என்று உணர்ந்த சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்கள்,
எம்.பி.க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு
ஆதரவு தெரிவித்தனர்.
நாங்கள்தான் அதிமுக
ஜெயலலிதாவுக்கு சோதனை வந்த காலங்களிலும் அவர் உடன் 33 ஆண்டுகள் சசிகலா
இருந்ததால் அவர்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் சசிகலா தரப்பும்,
இரு முறை சிறை செல்ல நேர்ந்தபோது ஓ.பன்னீர் செல்வத்தையே முதல்வராக
நியமித்தார் என்பதால் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் அணியும்
தெரிவித்து வந்தன.
தீபாவுடன் சந்திப்பு
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு
வந்ததை அடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மெரீனாவுக்குச் சென்ற அதேவளையில் தீபாவை
சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து இருகரங்களாக
செயல்படவுள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.
கருத்துக் கேட்பு
ஜெயலலிதா தவறியபிறகு, தீபா வீட்டின் முன்பு கூட்டம் கூட தொடங்கியதும்
தனக்கு மக்களிடமும், தொண்டர்களிடமும் உள்ள ஆதரவை தெரிந்து கொள்வதற்காக
கருத்துக் கேட்பு பெட்டி ஒன்றையும் வீட்டு வாசலில் வைத்துள்ளார் தீபா.
அதில் போடப்படும் கடிதங்களில் உள்ள ஆலோசனைகளை படித்துவிட்டு தன் கணவர்
மாதவனுடன் ஆலோசனை நடத்துவார்.
ஓபிஎஸ்ஸுடன் இணையவில்லை
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபா, ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்
செல்வம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டு ஓபிஎஸ்ஸும்,
தீபாவும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர் என்று பெரிதும்
எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முத்தாய்ப்பாக பன்னீர் செல்வத்தின்
அறிவிப்பால் வரலாற்று திருப்புமுனை ஏற்படும் என்று மாஃபா பாண்டியராஜன்
தெரிவித்திருந்தார். ஆனால் திடீர் பல்டியாக தான் பன்னீர் செல்வத்தின்
நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று தீபா தெரிவித்தார்.
புதிய பேரமைப்பு
பதிலாக, எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையை தீபா தொடங்கினார். அதிமுகவின்
உண்மையான தொண்டர்களும், நிர்வாகிகளும் தனக்கு ஆதரவளிப்பதால் தங்கள் அணிதான்
உண்மையான அதிமுக என்று கூறியதோடு இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்றும்
சூளுரைத்தார். இதனால் அதிமுக தற்போது 3 அணிகளாக பிரிந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
வரும் மே மாதத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியாக
எந்த கட்சி உள்ளதோ அந்தக் கட்சியின் உறுப்பினர்களே உள்ளாட்சித்
தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வெற்றி காண்பர் என்பது தமிழக வரலாறு. காரணம்
ஆளும் கட்சியாக இருப்போர் செய்யும் கவனிப்புகளும், அதிகார பலமும்தான்.
அதிமுகவில் பிளவு
ஆனால் தற்போதைய ஆளும் அதிமுகவில் நிர்வாகிகள் 3 அணிகளாக பிரிந்துள்ள
நிலையில் அந்த 3 அணிகளும் பிளவுண்டு கிடக்கின்றன. தொண்டர்கள் யார் பக்கம்
உள்ளனர் என்பதும் தெரியவில்லை. நிச்சயமாக அவர்கள் சசிகலா தரப்புக்கு ஆதரவாக
இல்லை. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் பிரிந்து சிதறும்.
வாய்ப்புகளே அதிகம்.
அள்ளப் போவது யார்?
இப்படிப் பிரிந்து கிடக்கும் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யப் போவது
யார் என்பதுதான் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதைய சூழலில்
திமுகவுக்கு அதிக அளவில் வாக்குகள் போகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேசமயம், பாஜகவும் முடிந்தவரை வாரி எடுக்க முயற்சிக்கும். ஆனால் பாஜக மீது
மக்களுக்கு நிறையவே வெறுப்பு உள்ளதையும் மறந்து விட முடியாது.
பாஜக மீது வெறுப்பு
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம், இந்துத்துவ கொள்கை,
ஹைட்ரோ கார்பன் திட்டம், கோவையில் எதிர்ப்புகளை மீறி ஈஷா மைய சிவன் சிலை
திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டது, தமிழக விவசாயிகள்
தற்கொலை குறித்து அக்கறை காட்டாதது, வறட்சி நிவாரண நிதி ஒதுக்காதது,
காவிரிப் பிரச்சினையில் செய்த துரோகம், நீட் தேர்வு என பாஜக மீது மக்கள்
வெறுப்பில் உள்ளனர்.
திமுக பயன்படுத்திக் கொள்ளுமா
திமுகவை பொறுத்தவரை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள
மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள், அக்கட்சி மீது மக்களுக்கு முன்பிருந்த
மனக்கசப்புகளை மறந்து போக செய்துவிட்டது என்றே கூறலாம். அதிமுக, பாஜக ஆகிய
கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது சற்று கடினமான காரியமாக உள்ளபோது
மக்களின் சாய்ஸ் நிச்சயம் திமுகவாக இருக்கும்பட்சத்தில் அந்த வாய்ப்பை
நழுவவிடாமல் திமுக பயன்படுத்திக் கொள்ளுமா? என்பதையும் பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment