எடப்பாடி பழனிச்சாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்த நான் தயாராக
இருக்கிறேன். உணர்ச்சியுள்ள தமிழன் ஒருவனாவது தமிழகத்தில் இருக்கிறானே
என்று காட்டுவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்த நான் தயார் என்றும் முன்னாள்
உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
தமிழக அரசியல் விவகாரத்தில் தமிழக மக்களைப் போலவே கட்ஜுவும் கடும்
கொதிப்புடன் உள்ளார். தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசை பொறுத்துக்
கொண்டிருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. நீங்கள் எல்லாம்
தமிழர்கள்தானா என்றும் அவர் கோபமாக கேட்டுள்ளார்.
என்னை தமிழன் என்று பெருமையுடன் கூறி வந்தேன். இனி எந்த முகத்தை வைத்துக்
கொண்டு அப்படிச் சொல்வேன் என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இந்த
நிலையில் உணர்ச்சியுள்ள தமிழனாக நான் போராடத் தயார் என்று அதிரடியாக
அறிவித்துள்ளார் கட்ஜு. இதுகுறித்து அவர் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:
பயப்படுகிறார்கள்
பேஸ்புக்கில் வரும் கருத்துக்கள், டிவீட்டுகளை வைத்துப் பார்க்கும்போது
தற்போதைய தமிழக பினாமி ஆட்சி குறித்து மக்களுக்குப் பயம் உள்ளதாக நான்
கருதுகிறேன். தமிழக ஆட்சியை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி
நடத்துகிறார்.
பயப்படாத தமிழன் நான்
நல்லது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத ஒரு தமிழன் இருக்கிறான். அது நான்தான்.
என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. நான் வெளிநாட்டிலிருந்து மே மாதம் நாடு
திரும்புகிறேன். அதன் பின்னர் தமிழ்நாட்டுக்கு வருகிறேன்.
கொடி பிடித்துப் போராடத் தயார்
நேராக பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு அல்லது அலுவலகம்
சென்று அங்கு சிறைப்பறவையால் நடத்தப்படும் இந்த பினாமி ஆட்சி ஒழிக என்று
எழுதப்பட்ட பேனருடன் போராட்டம் நடத்துவேன்.
இரண்டில் ஒன்று பார்ப்போம்
ஒன்று என்னை அவர்கள் கைது செய்ய வேண்டும். அல்லது பதவியை விட்டு எடப்பாடி
பழனிச்சாமி விலக வேண்டும். இரண்டில் ஒன்று நடக்கும் வரை போராட்டம் நடத்த
நான் தயார்.
ஒருத்தனாவது இருக்கானே
தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு தமிழானவது இருக்கிறானே என்று காட்ட
இந்தப் போராட்டத்தில் ஈடுபட நான் தயார் என்று கட்ஜு அதிரடியாக
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment