Latest News

சொத்துக்குவிப்பு வழக்கு.. 1996 டூ 2017... 21 ஆண்டு கால பயணம்!

 
ரூ.66 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. 1996 முதல் 2017 வரை இந்த வழக்கு கடந்த 21 ஆண்டுகாலமாக வந்த பாதையை காணலாம். •கடந்த 1991ஆம் அண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்தார் என்பது குற்றச்சாட்டு.

• சொத்துக்குவிப்பு வழக்கின் காரணகர்த்தாவே சுப்ரமணியசுவாமிதான். 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார். •1996ஆம் அப்போதய திமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். •1997ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. • 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார். • 2003 ஆண்டு இந்த வழக்கில் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி திமுக பொதுச்செயலாளர் கே.அன்பழகன் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து வழக்கு பெங்களூருவிற்கு மாற்றப்பட்டது. • 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார். வழக்கு விசாரணைக்காக பெங்களூரு சென்று வந்தார். • 2014, செப். 17ல் 18 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் வழக்கை விசாரித்த, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். • ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். அபராதமாக ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் விதித்தார். • நால்வரும் உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. • ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி 2014ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். • பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கடந்த செப்டம்பர் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். •மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நியமிக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி விசாரணை தொடங்கியது. நான்கு பேர் தரப்பிலும் சுமார் 400 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. • 41 நாட்களில் அனைத்துக்கட்ட விசார ணையை முடித்த நீதிபதி குமாரசாமி 2014ஆம் தேதி மார்ச் 11ல், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். 2014ஆம் ஆண்டு மே 11ஆம் மேதி மொத்தம் 919 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பினை நீதிபதி குமாரசாமி வாசித்தார். •சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப் படுகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான தண்டனை ரத்து செய்யப் பட்டு நிரபராதிகள் என விடுவிக்கப்படுகின்றனர். நான்கு பேரின் ஜாமீன் பத்திரங்கள் ரத்து செய்யப் பட்டு, வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் விடுவிக்கப்படுகின்றன என்றார் நீதிபதி குமாரசாமி.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பினையடுத்து மே 23ஆம் தேதி 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். • 2015, ஜூன் மாதம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. • 2016 மே 23ஆம் தேதியன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வெற்றி பெற்றார். • 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் அனைத்து வாத பிரதிவாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. • 2017 பிப்ரவரி 14 ஆம் தேதியன்று இந்த வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. • சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு சசிகலாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் தமிழகமே இந்த தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.