தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறு இல்லை என்றும், அதேநேரம்,
அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என பாஜக தேசிய
செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில்
நடைபெற்ற, 'புதிய பொருளாதாரத்தை நோக்கி நமது பாரதம்' கொள்கை விளக்க
பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசுகையில் இவ்வாறு கூறினார்.
ராஜா மேலும் கூறியதாவது: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு
இரட்டை நிலைப்பாடுடன் உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி
உள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன் திட்டத்துக்கு
கையெழுத்து போட்டு விட்டு எதிர்க்கட்சியான பின்னர் எதிர்ப்பதுதான் இரட்டை
நிலைப்பாடு.
2011ம் ஆண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்த போதுதான்
காளையை காட்சி விலங்கு பட்டியலில் சேர்த்தனர். அப்போது இவர்கள் என்ன செய்து
கொண்டிருந்தார்கள்?
கடந்த ஆண்டு ஜனவரி 9ல் ஜல்லிக்கட்டை அனுமதித்து வெளியிட்ட மத்திய அரசின்,
அரசாணையை உச்சநீதிமன்றம் தடை செய்துவிட்டது. எனவே இப்போது மத்திய அரசின்
கரங்கள் கட்டப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே அவசர
சட்டம் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது 144 தடை உத்தரவு பிறப்பித்தால் மீறிப்
போராட்டம் நடத்துவோம். நம் உரிமைகள் உறுதிப்பாட்டை பறைசாற்ற தடையை
மீறுவதில் தப்பு இல்லை. தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவதிலும் தவறு இல்லை.
மீறும்பட்சத்தில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க
வேண்டும். இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாஜக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி
மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்த நிலையில், அக்கட்சி
ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியோ அப்படி செய்தால் மாநில அரசை
கலைக்க முடியும் என மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment