அமைதியாகப் போராடியவர்களை சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள்
என்றெல்லாம் இட்டுக்கட்டி, தமிழர்களின் உணர்ச்சிமிகு போராட்டத்தை
கொச்சைப்படுத்த முனைவதை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கைவிட
வேண்டும் என்று திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான டிகேஎஸ்
இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''மாணவர்களும்,
இளைஞர்களும் மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டுக்கான
சட்டத்தை வென்றெடுத்து விட்ட நிலையில், அவர்களது போராட்டம் பற்றிய
விஷமத்தனமான கருத்துகளை வெளியிட்டு தமிழர்களின் உணர்வுகளை
கொச்சைப்படுத்தும் மத்திய பாஜக இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கடும்
கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் கலாச்சாரத்திற்காக, பண்பாட்டிற்காக போராடி பெற்ற வெற்றியை கேலி
செய்வதும், அந்த போராட்டத்தை ஏதோ தீவிரவாதிகள் போராட்டம் போல்
சித்தரிப்பதும் ஆற்றுக்குள் மூழ்கியவன் ஏதாவது ஒரு விழுதைப் பிடித்து ஏறி
வந்து விடலாமா என்ற சிந்தனையோட்டத்தில் மாநில பாஜக இருப்பதை எடுத்துக்
காட்டுகிறது.
அறவழியில் ஏழு நாட்கள் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் எவ்வித
வன்முறையிலும் ஈடுபடவில்லை. சென்னை மாநகரத்தின் பிரதான சாலையான காமராஜர்
சாலையில் எவ்வித போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படவில்லை.
காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் தமிழுணர்வால் பிணைக்கப்பட்டு,
நண்பர்களாக, சகோதர்களாக ஒருவருக்கொருவர் ஏழு நாட்கள் பாதுகாப்புடன் நின்று,
ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதை அகில உலகமே
பாராட்டியது.
ஆனால் இந்த போராட்டம் தேசவிரோதிகள் போராட்டம் என்ற அளவுக்கு சித்தரிக்கும்
துணிச்சல் தமிழராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு
எப்படி வந்தது என்று தெரியாமல் தவிக்கிறேன். மத்திய பாஜகவில் அமைச்சராக
இருப்பதால் அவருக்கும் தமிழுணர்வு பட்டுப் போய் விட்டதா? தமிழர்களின்
கலாச்சார சிறப்பான ஜல்லிக்கட்டு டெல்லிக்குப் போனதும் மறந்து போய் விட்டதா
என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று கூறி விட்டு மன்னிப்பு கோரிய மத்திய
அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு திமுக கொண்டு வந்த ஜல்லிக்கட்டு
முறைப்படுத்தும் சட்டம் குறித்து குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை.
மத்தியில் உள்ள மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு துணையாக திமுக அரசு சட்டம்
கொண்டு வந்தது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டம்
2009-ன் பிரிவு 10 ன் கீழ் இது தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஒரு வேளை
இதுவரை திமுக அரசு ஜல்லிக்கட்டு சட்டத்தை மத்திய இணை அமைச்சர்
படிக்கவில்லையென்றால் இனியாவது அதை படித்துப் பார்க்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின் சட்டத்திற்கு முரணாக மாநில அரசு சட்டம் கொண்டு வந்தால்
குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். பிறகு
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் மத்திய அரசின்
சட்டத்திற்கு துணையாக ஒரு சட்டத்தை மாநில அரசு கொண்டு வர அதிகாரம்
இருக்கிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் திமுக அரசு ஜல்லிக்கட்டு
நெறிமுறைச் சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை எப்படி
பாதுகாப்பாக நடத்துவது என்று விரிவான வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு
ஏற்பாடுகள் வரையறுக்கப்பட்டன.
ஆகவே அன்றைக்கு திமுக அரசு கொண்டு வந்த சட்டம் முழுக்க முழுக்க
சரியானது. அதனால் தான் 2006 முதல் 2011 வரை ஜல்லிக்கட்டு எவ்வித தடையும்
இல்லாமல் தமிழகத்தில் நடைபெற்றது. ஏன் அதிமுக ஆட்சி வந்த பிறகு கூட 2014
வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மத்தியில் பாஜக 2014ல் ஆட்சிக்கு வந்தது.
அன்றிலிருந்து 2015, 2016, 2017 ஆகிய மூன்று வருடங்கள் ஜல்லிக்கட்டு நடத்த
முடியவில்லை.
ஆகவே மத்திய பாஜக ஆட்சியிலும், மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சியிலும்தான்
ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தடைபட்டு இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு
வித்திட்டது. இது கூட புரியாமல், புரிந்தும் புரியாதது போல் திமுக மீது பழி
சுமத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி அவதூறுகளை அள்ளி வீசுவதை
பொறுப்புள்ள பதவியில் உள்ள மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு
அழகல்ல.
இன்றைக்கு தமிழகத்தில் இவ்வளவு பெரிய போராட்டத்தில் இளைஞர்கள் குதித்ததற்கு
மத்திய அரசும், மாநிலத்தில் உள்ள கையாளாகாத அரசும்தான் என்பதை மறைக்க
மத்திய இணை அமைச்சர் செய்யும் பொய் பிரச்சாரம் எந்த அரங்கத்திலும் எடுபடாது
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், ஆந்திராவில்
ஹைதாராபாத் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்ற போராட்டங்களை தேசவிரோத சக்திகள்
என்று நீங்கள் முத்திரை குத்தியது போல், அதே நரித்தனத்தை கடைப்பிடித்து
தமிழகத்தில்- குறிப்பாக தமிழக இளைஞர்களால், மாணவர்களால் நடத்தப்பட்ட உலகமே
போற்றிய அறவழி போராட்டத்தின் மீது குத்தி தமிழர்களை கொச்சைப்படுத்துவதை
தயவு செய்து கைவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேச பக்தியில் தமிழர்களும், தமிழக இளைஞர்களும் மற்ற மாநிலத்தவருக்கு
எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பொன் ராதாகிருஷ்ணன் போன்றோருக்கு
நினைவூட்டுவது என் கடமை என்று கருதுகிறேன். அமைதியாகப் போராடியவர்களை சமூக
விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்றெல்லாம் இட்டுக்கட்டி,
தமிழர்களின் உணர்ச்சிமிகு போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைவதை கைவிட
வேண்டும்.
இப்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மாநில அரசின் மிருகவதை
தடுப்பு திருத்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுக்
கொடுப்பதில் மத்திய அரசை உறுதியுடன் செயல்பட வைக்க மத்திய இணை அமைச்சர்
பொன் ராதாகிருஷ்ணன் ஈடுபட வேண்டும். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment