அரசியலை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாக, அதிமுக கொள்கை பரப்பு
இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழ் செய்தி சேனலான 'புதிய தலைமுறைக்கு'
அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தாலும், வாய்ப்பு வந்தால் அவர் திமுக
கட்சியில் இணைவார் என கூறப்படுகிறது.
திமுக மேடைகளில் பிரசார பீரங்கியாக முழங்கி வந்தவர் நாஞ்சில் சம்பத்.
திராவிட கொள்கைகளில் தீவிர நம்பிக்கை கொண்டவர். வைகோவுடன் நட்பு பாராட்டி
வந்தார்.
ஆனால் திமுக தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கை தொடர்ந்து, ம.தி.மு.க கட்சியை வைகோ
தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக
செயல்பட்டார். தொடர்ந்து 19 வருடங்களாக வைகோவின் வலதுகரமாக அறியப்பட்டார்.
பிரசார பீரங்கி
மதிமுக பிரசார மேடைகளில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களுமே
நாஞ்சில் சம்பத்தின் வார்த்தை அம்புகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2012ம் ஆண்டு மதிமுக கட்சியில் இருந்து வெளியேறினார். இலக்கிய
பணியில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
ஜெயலலிதாவே அழைத்தார்
ஆனால் அதிமுகவிலிருந்து தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்தன. முதல்வராக இருந்த
ஜெயலலிதாவே அவரை போனில் தொடர்பு கொண்டு கட்சியில் இணைய அழைத்தாராம்.
இதனால், 2012ல் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்
கொண்டார். இனோவா காரை அவருக்கு பரிசளித்தார் ஜெயலலிதா. கொள்கை பரப்பு துணை
செயலாளர் பதவியை பெற்ற நாஞ்சில் சம்பத் தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
சர்ச்சை பேட்டியொன்றால் அப்பதவியை ஜெயலலிதா பறித்தாலும், சில கால
இடைவெளியில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியை கொடுத்தார்.
தவிர்ப்பு
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா அளித்த காரினை
அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தார். சசிகலா அக்கட்சி பொதுச்
செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நாஞ்சில் சம்பத்
அதிருப்தியிலிருந்தாராம். இதுவரே அம்முடிவுக்கு காரணம் என்று
கூறப்படுகிறது.
திமுகவுக்கு செல்ல திட்டம்
இந்த முடிவை எடுக்கும் முன்பே திமுகவில் இணைய ஸ்டாலினுக்கு தூதுவிட்டு
வருவதாக செய்திகள் பரவி வந்தன. இன்று சன் நியூஸ் சேனலுக்கு அளித்த
பேட்டியில் கூட அரசியலில் இருந்து வெளியேறப்போவதாக அவர் கூறவில்லை. அவர்
திமுகவிலிருந்து அழைப்பு வந்தால் இணையலாம் என திட்டமிட்டுள்ளார். தாய்
கழகத்திற்கே திரும்பி விடலாம் என்பது அவரது முடிவு என அவருக்கு
நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அதிமுகவிலிருந்து விலகிய இலக்கியவாதியான
பழ.கருப்பையாவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகதான் முதலில் கூறினார்.
பின்னர் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment