அரசியலை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாக, அதிமுக கொள்கை பரப்பு
இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழ் செய்தி சேனலான 'புதிய தலைமுறைக்கு'
அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க மேடைகளில் பீரங்கியாக முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க
கட்சியை வைகோ தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு
செயலாளராக செயல்பட்டார். வைகோவின் வலதுகரமாக அறியப்பட்டார். 2012ம் ஆண்டு
அந்த கட்சியில் இருந்து வெளியேறினார். இலக்கிய பணியில் ஈடுபட போவதாக
அறிவித்தார். ஆனால் அதிமுகவிலிருந்து தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்தன.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவே அவரை போனில் தொடர்பு கொண்டு கட்சியில் இணைய
அழைத்தாராம்.
இதனால், 2012ல் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்
கொண்டார். இனோவா காரை பரிசளித்தார் ஜெயலலிதா. அதிமுக வரலாற்றிலேயே முதல்
முறையாக பிரசாரத்திற்காக நிர்வாகி ஒருவருக்கு புதிய இனோவா கார் ஒன்றினை
ஜெயலலிதா பரிசளித்தது அதுதான் முதல் முறை.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா அளித்த காரினை
அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தார்.
இது தொடர்பாக இன்று பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், இனி பொதுவாழ்வு
வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார். திமுகவில் சேர தான்
எந்தக் கதவையும் தட்டவில்லை எனவும், அந்தக் கட்சியில் இணையுமாறு
நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் கூறினார். அரசியலே வேண்டாம் என்று
முடிவு செய்து விட்டதால் திமுகவிலும் தாம் சேரப் போவதில்லை என்றும்
நாஞ்சில் சம்பத் கூறினார். இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள போவதாக
அறிவித்தார்.
No comments:
Post a Comment