Latest News

  

எஞ்சிய காலத்தை அ.தி.மு.க.வுக்கு அர்ப்பணித்து உழைப்பேன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற சசிகலா உருக்கமான பேச்சு


அம்மாவும், கழகமும் உலகம் என்று வாழ்ந்தேன்’ என்றும் வாழ்வின் எஞ்சிய காலத்தை அ.தி.மு.க.வுக்கு அர்ப்பணித்து உழைப்பேன் என்றும் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றவுடன் சசிகலா பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்–அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மதியம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கட்சி அலுவலகம் வந்தார் 

சசிகலா முதல் முறையாக கட்சி அலுவலகத்திற்கு வருவதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பகல் 12.12 மணியளவில் சசிகலா காரில் வந்து இறங்கினார்.

பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி அலுவலக நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் தரை தளத்தில் இருந்த பொதுச்செயலாளர் அறைக்கு சென்றார். புதுப்பிக்கப்பட்டு இருந்த பொதுச்செயலாளர் அறையில் மறைந்த முதல்–அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படமும், முருகன் படம் அச்சிடப்பட்ட ராணி முத்து காலண்டரும் இருந்தது. அங்கு அவர் சிறிது நேரம் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொறுப்பு ஏற்றார் 

12.36 மணிக்கு அவர் தனது அறையில் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதற்கான கட்சியின் ஆவணப்புத்தகம் மற்றும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து கூறினர். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல் அறிக்கையாக சசிகலா கையெழுத்திட்ட ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியையும் தலைமை கழகம் மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது.

12.40 மணிக்கு அவர் கட்சியின் மேல் தளத்திற்கு சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் 12.43 மணிக்கு அவர் பேசினார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்றவுடன் அவர் பேசியதாவது:–

கனவிலும் நினைக்காத ஒன்று 

உலகமே வியக்கிற வெற்றிகளால், அ.தி.மு.க.வை வழி நடத்திய ஜெயலலிதா, இப்போது நம்மிடம் இல்லாத நிலையில், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், கழகம் தான் தமிழகத்தை ஆளும் என, ஜெயலலிதா முன் வைத்துச்சென்றிருக்கிற நம்பிக்கையைக் காப்பதற்காக, இங்கே நாம் கூடி இருக்கிறோம்.

ஆயிரம், ஆயிரம் கூட்டங்களுக்கு நான் ஜெயலலிதாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொண்டேன். ஆனால் இன்று, மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது. உங்களின் அன்புக்கட்டளையை ஏற்க வேண்டிய கடமையும், கட்டாயமும் எனக்கு ஏற்பட்டு உள்ளது.

நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று; கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது. தலையில் இடி வந்து விழுந்ததைப் போல, நன்கு உடல் நலம் தேறி வந்த நம் அம்மா, நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

காப்பாற்ற போராடினோம் 

75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள். நம் அம்மாவை மீட்டுவிட வேண்டும் என்கிற மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடான கோடி தொண்டர்களாகிய, நமது ஆன்மீக வழிபாடுகளும் ஒன்று சேர, அவை நம் அம்மாவை காப்பாற்றிவிடும் என்று நான் உறுதியாக நம்பினேன். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வருகிற அளவுக்கு ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தும், தலை சிறந்த சிகிச்சைகள் மேற்கொண்டோம்.

லண்டன் மருத்துவர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மருத்துவர்களின் பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது. இன்னும் சில நாளில் ஜெயலலிதா பூரண நலம் பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்ற வேளையில், ஜெயலலிதாவின் இதயத்துடிப்பை நிறுத்தி, 10 கோடி தமிழ் மக்களின் பாசத்தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக்கொண்டான்.

எஞ்சியிருக்கும் காலத்தை... 

ஜெயலலிதாவின் அரசியல் ஆரம்ப காலம் முதல், அவரோடு தொடர்ந்து பயணித்தேன். அப்போது யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்; அம்மா என்கிற அந்த வார்த்தை இந்த அளவுக்கு மக்கள் இதயத்தை ஊடுருவும் என்று! ஆனால், இத்தனை ஆண்டுகள் அவரோடு இருந்த என் ஆசையெல்லாம், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். ‘‘அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா; அக்கா, மதிய சாப்பாட்டிற்கு என்ன வேண்டும்’’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்.

எனக்கு இப்போது 62 வயது ஆகிறது. கடந்த 33 ஆண்டுகளாக, என்னுடைய 29–வது வயது முதல் ஜெயலலிதாவோடு தான் இருந்துள்ளேன். அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிகமிகக் குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதை விட, அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை, எஞ்சி இருக்கும் காலத்தை, அம்மா கட்டிக்காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி தொண்டர்களுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது.

தாயை இழந்த பிள்ளை 

ஜெயலலிதாவுக்கென்று ஆசைகள் இருந்தது. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. அது, இந்த இயக்கம் வாழ வேண்டும்; தமிழ் மக்களை இந்த இயக்கம் வாழ வைக்க வேண்டும் என்பது தான். இத்தனை ஆண்டு காலமாக அது நிறைவேறியது. இனிமேலும் அது நிறைவேறிக்கொண்டு தான் இருக்கும்.

தனக்குப் பின்னால் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்று சட்டமன்றத்திலே நம் அரசியல் எதிரிகளுக்கு முன்னால், ஜெயலலிதா சிங்கம் போல கர்ஜித்தார். அது, அவர்களுக்கு மட்டும் பதில் அல்ல. ஜெயலலிதா இந்த உலகுக்கே சொன்ன செய்தி அது.

எத்தனையோ போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள் என எவ்வளவோ வந்த போதிலும், அதில் எல்லாம் ஜெயலலிதா வென்று வருவார்; நான் உறுதுணையாக இருப்பேன். ஆனால் இன்று, தாயை இழந்த பிள்ளைகளாய் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியாது 

அரசியல் மாடங்களில் பெண்கள் பங்கேற்று பெரும் புகழ் சேர்க்க முடியும் என்கிற புரட்சிகர வரலாறு நம் அம்மாவால் தான் உருவானது. இந்த இயக்கத்தின் மிகப்பெரும் ஊக்க சக்தியே தாய்மார்கள் தான் என்பதைக் கண்டு உலகமே வியக்கிறது. இன்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு பெண்ணாக, நான் கழகத்தின் பொதுச்செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமான காரணம், கோடான கோடி சகோதர, சகோதரிகள் எனக்கு பக்க துணையாக நிற்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான்.

தந்தை பெரியாரின் தன்மானம்! பேரறிஞர் அண்ணாவின் இனமானம், புரட்சித்தலைவரின் பொன்மனம், இவை யாவும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவின் போர்க் குணத்திற்கு ஈடு இணை ஆகிட ஒருவராலும் முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது; நிரப்பவே முடியாது.

ஆனாலும் ஜெயலலிதா, நமக்கு கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, அவரது பாதத்தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம். ஜெயலலிதா நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம். பேரறிஞர் அண்ணா; புரட்சித் தலைவர்; புரட்சித்தலைவி, இவர்கள் தான் இந்த மாபெரும் இயக்கத்திற்கு அடையாளம். இவர்களைத் தவிர, வேறு யாரும் இங்கே முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி.

தொண்டர்களை காப்போம் 

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர்கள். அவர்களின் அந்த மகத்தான வழியில் தான் இந்த இயக்கம் இன்றுவரை பயணித்திருக்கிறது. இனியும், அதே வழியில் தான் வீறு நடை போடும். ஜெயலலிதா, எந்த வேகத்தில் இந்த இயக்கத்தை வழி நடத்தினார்களோ, அதே வேகத்தோடு, எந்த ராணுவ கட்டுப்பாட்டோடு அ.தி.மு.க.வை ஜெயலலிதா வைத்திருந்தார்களோ, அதில் கடுகளவும் குறையாத, அதே கட்டுப்பாட்டோடும், உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு அளித்து அழகு பார்க்க, எந்த அளவுகோலை ஜெயலலிதா கொண்டிருந்தார்களோ, அந்த அளவுகோலோடு நம் அம்மா காட்டிய வழியில் இருந்து இம்மி கூட விலகாமல் இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம்.

கனி வெளியே தெரியும்! காய் வெளியே தெரியும்! பூ வெளியே தெரியும்! இலை வெளியே தெரியும்! கிளை வெளியே தெரியும்! ஆனால், இதையெல்லாம் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் அ.தி.மு.க. என்கிற இந்த இமயப் பேரியக்கத்தை கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் அப்பழுக்கில்லா கோடான கோடித்தொண்டர்கள். அவர்களின் உழைப்பு தான் இந்த இயக்கத்தின் உயிர் நாடி என்பதை உணர்ந்து, கட்சியின் தொண்டர்களை நாம் கண் இமையாகக் காப்போம். தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற அ.தி.மு.க. அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றுமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 

அ.தி.மு.க. நிறுவனத்தலைவர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, ஜனவரி மாதம் 17–ந்தேதி அன்று தொடங்குகிறது. இவ்விழாவினை, நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்பது, ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வண்ணம், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, அ.தி.மு.க. சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டின் நினைவாக, சிறப்பு அஞ்சல் தலையும், அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயமும் வெளியிட, அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் நிறைவாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். நம்மை இன்று விமர்சிப்பவரும் கூட, நாளை மனமுவந்து நம்மை பின் தொடரும் அளவுக்கு, ஒரு புனிதமான பொது வாழ்வை நாம் மேற்கொள்வோம். இன்னும் எவ்வளவு காலம் நான் வாழ்கிறேனோ, அதன் முழுமையையும் கழகத்தின் நலத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உரித்தாக்கிக் கொண்டு உழைப்பேன்.

ஜெயலலிதா வழியில்... 

‘ஒன்றரைக் கோடி பிள்ளைகளை உன் வசத்தில் ஒப்படைத்திருக்கிறேன்’ என்று ஜெயலலிதாவின் ஆன்மா என் அருகில் இருந்து ஆணையிடுவதாகவே என்றும் நான் உணர்கிறேன். ஜெயலலிதாவின் லட்சியக் கனவுகளை உயிராகக் காப்பதற்கு, நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக, என்னை ஒருமனதாக தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன். நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும், ஜெயலலிதா வழியில் பின்பற்றுவோம்.

ஜெயலலிதா வகுத்துத் தந்திருக்கும் நெறிமுறையில் நெல் முனை அளவும் மாறாமல், இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றுவேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய பணிகள் எல்லாம் வெற்றி பெற, உங்களின் ஒத்துழைப்பும், இறைவனின் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன். தந்தை பெரியாரின் தன்மானம்; பேரறிஞர் அண்ணாவின் இனமானம்; புரட்சித்தலைவரின் கனிவு; புரட்சித் தலைவி அம்மா நமக்கு போதித்த துணிவு, இவற்றையே உயிராக, உணர்வாகப் போற்றுவோம். ‘‘எங்கள் அம்மா புகழை இப்புவியே சொல்லும். எப்படை வரினும் இப்படையே வெல்லும்!’’ என்று உறுதி கூறி, ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று முழக்கமிட்ட ஜெயலலிதா வழியில் நம் பயணத்தை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.