முலாயம் சிங்குடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து
சமாஜ்வாடி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவை நீக்கி பிறப்பித்த உத்தரவு
ரத்து செய்யப்பட்டது.
தந்தை–மகன் மோதல்
உத்தரபிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்
ஆளும் சமாஜ்வாடி கட்சியில் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும்,
முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து
வருகிறது. இதில் சமீபத்திய நிகழ்வாக வேட்பாளர் தேர்வில் மோதல் வெடித்தது.
அதன்படி
தனது சகோதரரும், மாநில சமாஜ்வாடி தலைவருமான சிவபால் சிங் உள்பட 325 பேர்
கொண்ட பட்டியலை முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் வெளியிட்டார். இதில் தனது
ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ்,
தனது தரப்பில் 235 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக
வெளியிட்டார்.
கட்சியில் இருந்து நீக்கம்
இவ்வாறு மோதல் முற்றியதை தொடர்ந்து முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ்
மற்றும் தனது ஒன்றுவிட்ட சகோதரரும், கட்சியின் பொதுச்செயலாளருமான
ராம்கோபால் யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி வைத்து
முலாயம் சிங் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இது உத்தரபிரதேச
மாநில அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக
முலாயம் சிங் தரப்பிலும், அகிலேஷ் தரப்பிலும் தனித்தனியாக ஆதரவாளர்களின்
கூட்டம் நேற்று நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
200–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்
அதன்படி அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் நேற்று காலையில் இருந்தே அவரது
இல்லத்தில் குவிய தொடங்கினர். இந்த கூட்டத்தில் சமாஜ்வாடியை சேர்ந்த
200–க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு மந்திரிகள் பங்கேற்றனர்.
மேலும் கட்சியின் மூத்த தலைவர்களும், சில எம்.எல்.சி.க்களும் கலந்து
கொண்டனர்.
அதேநேரம் கட்சித்தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டு இருந்த முலாயம்–சிவபால் ஆதரவாளர்களின் கூட்டத்தில் மிகவும்
குறைவான எண்ணிக்கையிலேயே தலைவர்கள் வந்திருந்தனர். இதனால் சமாஜ்வாடி கட்சி
உடையும் நிலை காணப்பட்டது.
பரபரப்பு திருப்பம்
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பரபரப்பு திருப்பம் அரங்கேறியது.
மாநில மூத்த மந்திரிகளில் ஒருவரான முகமது ஆசம்கான் சமாஜ்வாடி தலைவர்
முலாயம் சிங் யாதவை சந்தித்து பேசினார். மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி
வரும் நேரத்தில் குடும்பம் மற்றும் கட்சி இரண்டும் மிகவும் ஒற்றுமையாக
இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முலாயமுடன் சுமார் ஒரு மணி
நேரம் பேசிய அவர், தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு
இருந்த அகிலேசையும் பின்னர் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து தந்தையும்,
மகனும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
தந்தை–மகன் சந்திப்பு
அதன்படி முலாயம், அகிலேஷ் இருவரும் சந்தித்து பேசினர். இந்த
சந்திப்பின் போது அகிலேஷிடம் உணர்ச்சி ததும்ப பேசிய முலாயம், ‘நான் உன்னை
மாநிலத்துக்கு முதல்–மந்திரியாக்கினேன், ஆனால் இன்று நீ எனக்கு எதிராக
செயல்படுகிறாய். கடந்த காலங்களில் உன்னுடைய விருப்பத்துக்கு மாறாக நான்
ஒருபோதும் செயல்பட்டதில்லை’ என்று கூறினார். அப்போது சிவபால் யாதவும்
உடனிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து மேற்படி எந்த விவரமும்
வெளியிடப்படவில்லை. எனினும் அப்போது அகிலேஷ் தரப்பில் 3 கோரிக்கைகள்
வைக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, அமர்சிங்கை
கட்சியில் இருந்து நீக்க வேண்டும், தனது ஆதரவாளர்களுக்கு தேர்தலில்
போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும், கட்சியின் தலைவர் அல்லது
ஒருங்கிணைப்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முலாயமிடம்,
அகிலேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நீக்கம் ரத்து
இந்த கோரிக்கைகளை ஏற்க முலாயம் சிங் ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு
இடையே சமரசம் ஏற்பட்டது. தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மற்றும் ராம் கோபால்
யாதவ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை முலாயம் சிங்
வாபஸ் பெற்றார்.
இந்த தகவலை கட்சியின் மாநில தலைவர் சிவபால் சிங்
யாதவ் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்டார். சமாஜ்வாடியில் நிலவி வந்த
சர்ச்சைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர்,
முலாயம், அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து தேர்தல் பிரசாரம்
மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதன்படி ஜானேஸ்வர் மிஸ்ரா
பூங்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில்
உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை புதிதாக
தொடங்குவார்கள் என தெரிகிறது.
லாலு பிரசாத் பேச்சுவார்த்தை
முன்னதாக சமாஜ்வாடியில் நிலவிய குழப்பத்துக்கு முடிவு கட்டுவதற்காக
முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுடன் பீகார் முன்னாள்
முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவும்
பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முலாயம் சிங் யாதவுடன்
சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, அகிலேஷின் வீட்டில் நடந்து கொண்டிருந்த
ஆதரவாளர்கள் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது. முலாயம் சிங்கின்
ஆதரவாளர்கள் கூட்டம் தொடங்காமலேயே ரத்து செய்யப்பட்டது.
அகிலேஷ்
மற்றும் ராம் கோபால் யாதவ் ஆகியோர் சமாஜ்வாடியில் மீண்டும் சேர்க்கப்பட்டதை
தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் நிலவிய 20 மணி நேர அரசியல் குழப்பம்
முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment