பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து நடிகை குஷ்பு
தாக்கல் செய்த மனுவுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க மண்டல பாஸ்போர்ட்
அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை குஷ்புவிற்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த 2012ல்
புதுப்பித்து பாஸ்போர்ட் வழங்கியது. 2022 வரை இது செல்லுபடியாகும்.
அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டதால் அவரது பாஸ்போர்ட்
தாள்கள் நிரம்பி விட்டன. இதையடுத்து பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி சென்னை
மண்டல அலுவலகத்தில் குஷ்பு விண்ணப்பித்தார்.
ஆனால், கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம்
காட்டி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்.
இதை எதிர்த்து நடிகை குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்தார்.
அந்தமனுவில், என்னிடம் பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள பக்கங்கள்
பயன்படுத்தப்பட்டு முடிந்து விட்டது. கூடுதல் பக்கங்களை இணைக்க கோரி,
தென்மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். பாஸ்போர்ட்டை
புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கையை
பாஸ்போர்ட் அதிகாரி மறுத்து விட்டார்.
என் மீது கிரிமினல் வழக்கு உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது
என்று கடந்த மாதம் 28ம் தேதி பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
இது சட்ட விரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்
போது, என் மீது பொய்யாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த
வழக்குகளில் நான், முன்ஜாமீன் பெற்றேன்.
அப்படி இருந்தும், பாஸ்போர்ட் அதிகாரி, எனது கோரிக்கையை ஏற்க மறுத்தது
தவறானது. எனவே, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிட வேண்டும். வருகிற 12ம்
தேதி வெளிநாடு செல்ல உள்ளேன். எனவே, எனது பாஸ்போர்ட்டை அதற்குள்
புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில்
பதிலளிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment