சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளரான
சசிகலா படத்தைத் திறந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என அக்கட்சியின்
செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
போயஸ் கார்டன் பங்களாவில் அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலாவை
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த
விவாதம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் என்ன நடக்கிறது என்ற
ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது.
சசிகலா முதல்வராக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால்
பன்னீர்செல்வம் தமது பதவியை ராஜினாமா செய்வது குறித்து சசிகலாவுடன்
விவாதித்து வருவதாகவும் கூறப்பட்டது.
அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலா அடுத்தது முதல்வர் பதவியை குறி
வைத்துள்ளார். இதனால் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
ஒருங்கிணைந்து
சசிகலாதான் முதல்வர் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதில் உச்சகட்டமாக அதிமுக கொள்கை பரப்பு செயலரும் லோக்சபா துணை
சபாநாயகருமான தம்பிதுரை, ஆட்சியும் கட்சியும் ஒருவரிடம்தான் இருக்க
வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென போயஸ் கார்டன் பங்களாவுக்கு
பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் மணிகண்டன், தங்கமணி
ஆகியோரும் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்,
போயஸ் கார்டன் இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா படத்தைத்
திறந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக
எம்.பி..க்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்
எனக் கூறியுள்ளார். இதனால் 2 மணிநேரமாக நீடித்த பரபரப்பு அடங்கியது.
No comments:
Post a Comment