தமிழகம் இதுவரை பார்த்திராத பல அரசியல் கேவலங்களைப் பார்க்க
ஆரம்பித்துள்ளது. 'முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி.. ' என்ற ஒரே தகுதி
போதும், கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கட்சியை
நிர்வகிக்கவும், ஏழரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை ஆளவும் என்ற
நிலையை உருவாக்கியுள்ளனர் அதிமுக நிர்வாகிகள்.
வெளியிலிருந்து பார்த்தால் கட்சி நிர்வாகிகள் எல்லாம் சசிகலாவை 'சீக்கிரம்
சிஎம் ஆகுங்க... அப்பதான் எங்க ஜென்மம் சாபல்யமடையும்' என்று
வற்புறுத்துவது போலத் தெரிந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள்.
சசிகலா மற்றும் அவரது குடும்ப கேங்கின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டல்
காரணமாகவே கட்சியினர் சசிகலாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாக நம்பகமான
'சோர்ஸ்' ஒன்இந்தியாவிடம் தெரிவித்தது.
காரணம் வெளிப்படையானது. சசிகலா தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும்
சொத்துக் குவிப்பு வழக்கு. அந்த வழக்கின் தீர்ப்புத் தேதி நாளையோ நாளை
மறுநாளோ வெளிவரவிருக்கிறது. அதற்குள் முதல்வராகிவிட்டால் தப்பிக்க
வாய்ப்பிருப்பதாக மன்னார்குடி கும்பல் கொடுத்த அட்வைஸ் கம்
நெருக்கடியால்தான் ஜெ இறந்து ஒரு மாதத்துக்குள் சசிகலா முதல்வராகத்
துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு வாய்ப்புத் தரக் கூடாது என்பதில் மோடி ரொம்பத் தெளிவாக
இருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளராகிவிட்ட சசிகலா, நினைத்த நேரத்தில்
முதல்வராகிவிட முடியும். காரணம் கட்சித் தலைமை உத்தரவை முதல்வராகவே
இருந்தாலும் ஓபிஎஸ்ஸால் மீற முடியாது. ஆனால் அப்படி முதல்வர் பதவியை
ராஜினாமா செய்தால், மத்திய அரசின் அடுத்த டார்கெட் ஓபிஎஸ்தான் என
டெல்லியிலிருந்து சொல்லப்பட்டிருப்பதால், பதவியை விடாமல் தொடர்கிறார்
என்கிறார்கள்.
'முதல்வர் பதவியை எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய வேண்டாம். நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம். அமைதியாக இருங்கள்' என டெல்லியிருந்து வந்த
உத்தரவைத் தொடர்ந்துதான், முதல் முறையாக குடியரசுத் தலைவர் மற்றும்
பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். இதற்கு முன்
இருமுறை அவர் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் இப்படி
வாழ்த்துச் சொன்னதில்லை அவர்.
மோடியின் சொல்படி கேட்டு நடக்கிறார் ஓபிஎஸ் என்பது சசிகலா அன்ட் கோவுக்கு
நன்றாகவே தெரிந்திருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதாலேயே,
முன்பு உதயகுமார் போன்ற அமைச்சர்களை 'சின்னம்மா... சீக்கிரம்
முதல்வராகணும்' என்ற பல்லவியைத் தொடர்ந்து பாட வைத்தனர். அதற்கு ஓபிஎஸ்
அசையவில்லை என்பது தெரிந்ததும், இன்று தம்பிதுரை அறிக்கை என்ற பெயரில்
புதிய நெருக்கடியைத் தந்துள்ளனர். 'இந்த அறிக்கையை தம்பி துரை விடவில்லை...
கார்டனில் நடந்த தில்லாலங்கிடி வேலைகளுள் ஒன்று' என்றொரு தகவலும்
கசிந்துள்ளது.
ஓபிஎஸ் இந்த நெருக்கடிகளுக்குப் பணிவாரா.. அல்லது 'டிசம்பர் 6-ம் தேதி
நிமிர்ந்த முதுகுடன்' முதல்வராகத் தொடர்வாரா?
No comments:
Post a Comment