பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும்,
மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப்
போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் இன்று
ஒரே நாளில் மட்டும் 8 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில்
29 விவசாயிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊருக்கே உணவு படைக்கும் உழவர்கள் வாழ்வதற்கு வழியின்றி தொடர்ச்சியாக
மரணத்தை தழுவுவது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தலைகுனிவு. தமிழகத்தில் மட்டும்
கடந்த 5 ஆண்டுகளில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து
கொண்டதாக கூறுகிறது புள்ளிவிபரம்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர்
இன்றி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழப்பு
அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமைதான் காரணம்
என்பதே உண்மை.
கடலூர் மாவட்டம் ஆழங்காத்தான் கிராமத்தில் விவசாயி செந்தமிழன் மாரடைப்பால்
உயிரிழந்தார். நாகை மாவட்டம் அறுபதாம்கட்டளையில் விவசாயி தம்புசாமி
மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் புத்தகலூர் கிராமத்தில் விவசாயி வடமலை மாரடைப்பால்
உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தில் விவசாயி மண்ணு
நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே
வாகைகுளத்தில் விவசாயி அழகர்சாமி, பயிர்கள் கருகிய அதிர்ச்சியில்
உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஆலங்காத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் என்ற விவசாயி
மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடியில் விவசாயி
ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில்
இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விவசாயி
முருகன், நெற்பயிர் கருகியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 29 ஆக
அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 71 விவசாயிகள் பலியாகியுள்ளனர்
என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.
No comments:
Post a Comment