கட்சி தலைவர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடம்தான் இருக்க
வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருப்பது அவரின்
தத்துவம். இந்திய ஜனநாயகத்தில் அப்படி எந்த சட்டமும் இல்லை என தமிழக
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து
தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து ஒருவழியாக அதிமுக பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா.
அடுத்ததாக முதல்வர் பதவியை கைப்பற்ற வியூகம் வகுத்து செயல்பட்டு வருவதாக
தெரிகிறது. இதற்காகவே அமைச்சர்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள் இனி
சசிகலாவே முதல்வர் என்ற குரலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே கட்சித் தலைவர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடம்தான்
இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை ஒன்றை
வெளியிட்டது பரபரப்பை கிளப்பியிருந்தது.
இதுகுறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தம்பித்துரை அ.தி.மு.க.
தொண்டராக இருந்து இந்த கருத்தை சொல்லி இருந்தால் தவறு கிடையாது.
பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்து எழுத்துப்பூர்வமாக இப்படி
தெரிவித்து இருப்பது தவறான முன்னுதாரணம். பதவிக்குரிய மரியாதையை அவர்
கொடுக்கவில்லை.
யாரை கட்சி தலைவராக கொண்டு வருவது, முதல்வராக கொண்டு வருவது என்பதெல்லாம்
அந்த கட்சியினர் விருப்பம். ஆனால் தம்பித்துரை பதவியை ராஜினாமா செய்து
விட்டு சொல்லியிருந்தால் அவருக்கும் மரியாதை. அவர் வகித்து வரும் துணை
சபாநாயகர் பதவிக்கும் அழகு.
கட்சி தலைவர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடம்தான் இருக்க வேண்டும்
என்பது தம்பித்துரையின் தத்துவம். இந்திய ஜனநாயகத்தில் அப்படி எந்த
சட்டமும் இல்லை.
காங்கிரசில் சோனியா கட்சி தலைவராக இருக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக
இருக்கவில்லையா? பா.ஜனதாவில் அமித்ஷா தலைவராக இருக்கிறார். மோடி பிரதமராக
இருக்கவில்லையா? பல கட்சிகளில் இந்த நடைமுறை தான் இருக்கிறது.
தம்பித்துரைக்காக வரலாற்றை மாற்றக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment