Latest News

  

கொண்ட கொள்கையில் வென்று காட்டிய இளைஞர்கள்.. ஒருவாரம் நடந்த மெரினா புரட்சி முடிவுக்கு வந்தது

 
ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க வேண்டும் என்று, ஒரு வாரம் மெரினா கடற்கரையில் நடைபெற்றுவந்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க வழி செய்யும்வகையில் அவசர சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கினார். ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அதற்கிணங்க இன்று ஆளுநர் உரைக்கு பிறகு மரபுக்கு மாறாக அதே தினத்தில் சிறப்பு சட்டசபையை கூட்டியது அரசு. ஜல்லிக்கட்டு மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் பன்னீர்செல்வம். விவாதங்களுக்கு பிறகு ஒரு மனதாக சட்டம் நிறைவேறியது.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஜல்லிக்கட்டு போராட்டக்காரரும் இயக்குநருமான கவுதமன் கூறியது: ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நிரந்தர சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதே மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை. தற்போது அது நிறைவடைந்துள்ளது. எனவே இப்போது கொண்டாட வேண்டிய நேரம். மெரினா உட்பட எங்கெல்லாம் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் ஒப்புதலோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மாணவர்கள் மீதான தடியடி பற்றிய கேள்விக்கு பதிலளித்த கவுதமன், அவனியாபுரத்தில் என்மீதுதான் முதல் தடியடி விழுந்தது. தடியடி நடத்தியவர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளேன். மாணவர்கள் மீது தடியடி நடத்தியவர்களையும் சும்மா விடப்போவதில்லை. இப்போதைக்கு ஏறுதழுவுதல் வெற்றியை கொண்டாட முடிவு செய்துள்ளோம். ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவதை கூட நாளைக்கு நடத்தும் அரசு, இளைஞர்கள் கோரிக்கையை ஏற்று, இன்றே ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றி கொடுத்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதனிடையே கவுதமன் மெரினா பீச்சில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதை தெரிவித்தார். இதையடுத்து பலரும் வீடு திரும்ப ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.