நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், சென்னை
எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.45-க்கு மதுரைக்கு சிறப்பு ரயில்
இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை அவசர
சட்டம் மூலம் நீக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று
அறிவித்துள்ளார். இதையடுத்து அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி
நடைபெறும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தாமே
போட்டியை துவக்கி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக சென்னையில்
இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார் முதல்வர்
பன்னீர்செல்வம்.
இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சட்டம்
இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இளைஞர்கள், பெண்கள், மாணவ,
மாணவிகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் எழுச்சி மிகு போராட்டத்தை நடத்தி
வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒருபுறம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து
வந்தாலும் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக
தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை, எழும்பூரில் இருந்து இன்று இரவு
11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம்,
விருத்தாசலம், திருச்சி வழியே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையிலிருந்து மக்களை
அழைத்து சென்று அலங்காநல்லூரில் கூட்டத்தை கூட்ட இந்த சிறப்பு ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment