சமாஜ்வாடிக் கட்சியில் நிலவி வந்த மோதல் நேற்று மாலை உச்சகட்டத்தை
எட்டியது. உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு டிஸ்மிஸ்
செய்து அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ்
நேற்று நடவடிக்கை எடுத்தார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.
மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 325 தொகுதிகளுக்கான
வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி கட்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. கட்சி
தலைவர் முலாயம்சிங் வெளியிட்ட அப்பட்டியலில், அவருடைய மகனும், முதல்வருமான
அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டது.
இதனிடையே தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வந்த மோதல்
உச்சமடைந்தது. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை
அறிவித்தார் அகிலேஷ் யாதவ். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு
இடைநீக்கம் செய்து முலாயம் சிங் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார். அகிலேஷ்
யாதவ் ஆதரவாளரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவும் 6
ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதல்வராக இருக்கும் நிலையில்
அகிலேஷ் யாதவ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், முலாயமின் உத்தரவை ஏற்க ராம்கோபால் யாதவ் மறுத்துள்ளார். அவர்
அளித்த பேட்டியில், ''என் மீதும், அகிலேஷ் மீதும் எடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கை சட்ட விரோதமானது. கட்சியின் பொதுச் செயலாளராக இப்போதும் நானே
தொடர்கிறேன். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று கட்சிக் கூட்டம் நடத்த
உள்ளோம்'' என்றார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அகிலேஷ் ஆதரவாளர்கள் ஆங்காங்கே
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமானோர் முலாயம் வீட்டு முன்பு
குவிந்து கோஷமிட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து முலாயம் சிங், ஷிவ்பால் யாதவ் வீடுகளுக்கு போதுமான பாதுகாப்பு
வழங்கிட மாநில போலீசாருக்கு அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment