வங்கி மற்றும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள்
புத்தாண்டு முதல் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான
அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகளின்
மதிப்பு ரத்து செய்யப்படுவதாக கூறினார். இவற்றை வங்கிகள் மற்றும்
அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது.
அதேநேரத்தில் வங்கிக்கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பணம் எடுப்பவர்களின் கையில் மை
வைப்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணமின்றி பெரும் சிரமத்திற்கு
ஆளாயினர். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார
வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வங்கிகளில் சில்லறை தட்டுப்பாடு
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் வங்கிகளுக்கு புதிய 2000 ரூபாய்
நோட்டுகளே அதிகளவு அனுப்பப்பட்டது. மாறாக புதிய 500 ரூபாய் நோட்டு இதுவரை
முழுமையாக வரவில்லை. இதனால் வங்கிகளிலும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது.
விதிகளை 60 முறை மாற்றிய அரசு
போதிய அளவு பணம் இல்லாததால் பெரும்பாலான ஏடிஎம்கள் மூடிக்கிடக்கின்றன.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் 60
முறை விதிகளை மாற்றியமைத்துள்ளன.
நாளை மறுநாள் ஆலோசனை
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி ஒன்றரை மாதமாகியும்
பணத்தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் பொருளாதார
தட்டுப்பாடு உட்பட பொருளாதார விவகாரங்கள் குறித்து உயர்னிலை குழுவுடன்
பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்தவுள்ளார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை-ஆய்வு
அப்போது நிதி ஆயோக் உறுப்பினர்கள், மத்திய அரசின் நிதி வர்த்தகம், தொழில்
துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும் கலந்து
கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகு
தற்போது உள்ள நிலவரம், பணத்தட்டுப்பாடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை
ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
ரிசர்வ் வங்கியில் போதுமான பணம்
பழைய ரூபாய் நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற, வரும் 30ஆம்
தேதியுடன் அவகாசம் முடிகிறது. ரிசர்வ் வங்கியிலும் பணத்தட்டுப்பாட்டை
சமாளிக்கும் அளவுக்கு புதிய நோட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள் நீக்கம் அல்லது தளர்வு
எனவே புத்தாண்டில் இருந்து வங்கி மற்றும் ஏடிஎம்களில் இருந்து பணம்
எடுப்பதற்கான வரம்பை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். முழுமையாக
நீக்காவிட்டாலும், நிபந்தனைகள் தளர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என
கூறப்படுகிறது.
30க்குள் கறுப்புப் பணம் மீட்பு?
வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகள்
நீக்கப்பட்டால் மக்களிடையே மீண்டும் பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு வரும் என
கூறப்படுகிறது. இருப்பினும் 30ஆம் தேதிக்குள் பெரும்பாலான தொழில்
அதிபர்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும் கறுப்புப் பண முதலைகளை பொறி
வைத்து பிடிக்கவும் மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
No comments:
Post a Comment