Latest News

  

எலும்பில் ஒட்டிய சதையை தின்னும் நாய் போல கொள்ளையடித்துள்ளனர் - முத்தரசன் ஆவேசம்

 
எலும்பைத் தின்னும் நாய்கள் அதில் லேசாக ஒட்டியுள்ள சதையைக் கூட விடாமல் தின்னும். அதுபோல தமிழகத்தில் உள்ள ஆறுகளை மொத்தமாக கொள்ளையடித்துள்ளனர் சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆவேசமாக கூறியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமமோகன ராவை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காகவே ராவ் இதுபோல நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் முத்தரசன் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தப்பிப்பதற்காக நாடகம் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் உடல் நலம் சரியில்லை என்று கூறி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். உடல் நலம் சரியில்லாமல் போவது இயல்புதான். ஆனால் இவர் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு நாடகமாடுவதாக கூறப்படுகிறது. ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.

அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் எனவே அதிகாரிகள், ராவை உடனடியாக தனியார் மருத்துவனையிலிருந்து வெளியேற்றி சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அது பிரமாண்டமான நவீன மருத்துவமனை.

பறிமுதல் செய்யப்பட்டது எவ்வளவு? அவரது வீட்டிலும், மகன் வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும் நடந்த சோதனையின்போது பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக, சீரியல் எண்களுடன் பறிமுதலாகியுள்ளன. இங்கு நம்மால் ஒரு 2000 ரூபாய் எடுக்கக் கூட அலைய வேண்டியுள்ளது. ஆனால் அவர்களிடமிருந்து 30 லட்சத்திற்கு புதிய நோட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்த விவரத்தை முழுமையாக வருமான வரித்துறை வெளியிட வேண்டும்.

கொள்ளைக்கார சேகர் ரெட்டி சேகர் ரெட்டியின் நண்பர்கள், அதன் தொடர்ச்சியாகத்தான் தலைமைச் செயலாளர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. சேகர் ரெட்டி தமிழகத்தில் ஒரு ஆறைக் கூட விடவில்லை. அத்தனை ஆறுகளிலும் மணலைக் கொள்ளையடித்துள்ளார். தாமிரபரணி, பாலாறு என எந்த ஆறும் தப்பவில்லை. இது நீண்ட காலமாக நடந்து வருகிறது.

எலும்பில் உள்ள சிறு சதையைக் கூட விடாத நாய்கள் எலும்பில் உள்ள சிறிய சதையைக் கூட விடாமல் சாப்பிடும் நாய்களைப் போல இவர்கள் ஆற்றைக் கொள்ளையடித்துள்ளனர். ஏற்கனவே கொள்ளையடித்தவர்கள் எல்லாம் கூட உள்ளனர். அரசும், அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

அரசியல்வாதிகளையும் விடக் கூடாது அதிகாரிகள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். யாராக இருந்தாலும் சரி, எந்த ஆண்டாக இருந்தாலும் சரி, அந்த அரசியல்வாதிகளையும் கூட விடக் கூடாது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் பலருடைய பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பணியில் உள்ள பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் அவர்கள் தற்போதைய அமைச்சராக இருந்தாலும் சரி, முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எம்.பி., எம்.எல்.ஏ என யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் விடாதீர்கள் நடவடிக்கை எடுங்கள், பிரச்சினை இல்லை.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தமிழக ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாஜக அரசு பயன்படுத்தக் கூடாது. சோதனை, கைது நடவடிக்கைகளை தனது கட்சியை வளர்க்க சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள அரசு என்பது மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசாகும். அதைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. ஜெயலலிதா செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நள்ளிரவிலிருந்தே இந்த வேலைகளில் மத்திய அரசு இறங்கி விட்டது.

மக்கள் ஏற்க மாட்டார்கள் அப்படி நடந்து கொண்டால் அது ஊழல் ஒழிப்புக்குப் பயன்படாது. ஜனநாயக விரோதமாகவே கருதப்படும். தமிழக மக்களும் அதை ஏற்க மாட்டார்கள். எனவே இந்த நடவடிக்கைகளை தனது சொந்த லாபத்துக்காக மத்திய பாஜக அரசு பயன்படுத்தக் கூடாது என்றார் முத்தரசன்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.