திருவாரூர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட
பெண்ணுக்கு அவருக்குரிய வகை ரத்தத்தை ஏற்றாமல் மாற்றி ஏற்றியதால் கோமா
நிலைக்கு சென்ற விவகாரம் குறித்து, நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்களிடம்
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன் விசாரணை நடத்துகிறார்.
திருவாரூர் செருவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி
கமலா. இவர்களுக்கு திருமணம் நடந்து 18 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல்
இருந்த நிலையில், கமலா கர்ப்பவதியானார். இதனையடுத்து கமலா நன்னிலம் அரசு
மருத்துவமனையில் உரிய பரிசோதனை செய்து குழந்தை வளர்ச்சி குறித்து சிகிச்சை
பெற்று வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி கமலாவிற்கு பிரசவ வலி
ஏற்பட்டதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். 25ம் தேதி அன்று அவருக்கு செய்யப்பட்ட அறுவை
சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்தது. வீடு திரும்பிய கமலா ஒரு வாரம்
கழித்து மருத்துவமனைக்கு மீண்டும் வந்தார். அப்போது, கமலாவிற்கு ரத்தம்
குறைவாக உள்ளதாக கூறி டாக்டர்கள் ரத்தம் செலுத்தியுள்ளனர். ரத்தம்
செலுத்திய சில மணி நேரத்தில் கமலா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
கமலா திடீரென கோமா நிலைக்குச் சென்றதால் அதிர்ந்து போன அவரது உறவினர்,
இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தீவிரம்
அடைந்தது.
இதுதொடர்பாக, நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவர் அகிலா, சிகிச்சை
முறையில் தவறு எதுவும் நடக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் கமலாவின்
சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை தாக்கல்
செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன் நன்னிலம்
மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்துகிறார். தவறு செய்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அசோகன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment