பாஜக எப்படி செயல்பட்டு வருகிறது என்று தெரியுமா என்றும் பாஜகவினர்
உத்தமர்களா என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சரமாரியாக கேள்வி
எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான
மாயாவதியின் சகோதரர் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயும், பகுஜன்
சமாஜ் கட்சியின் வங்கிக் கணக்கில் 104 கோடி ரூபாயும் முறைகேடான வகையில்
டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக பாஜக புகார் கூறிவருகிறது.
அவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் தேசிய அரசியலில்
பரபரப்பு உருவாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவிற்கு மாயாவதி கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளதோடு, சரமாரியான கேள்விகளையும் கேட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்தே பாஜக இது போன்ற
வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் தேவையில்லாமல் வீண் அரசியலில் பாஜக
ஈடுபட்டு வருவதாகவும் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர்கள், முதலில் தங்களது கட்சி நேர்மையான முறையில் நடைபெறுகிறதா
என்பதை விளக்க வேண்டும் என்றும் பாஜகவினர் செய்துவரும் ஊழல் பற்றி விரைவில்
நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவினர் முதலில் தாங்கள் உத்தமர்களா என்பதை தெளிவுபடுத்த
வேண்டும் என்றும் மாயாவதி சவால் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment