Latest News

அனைத்து கனரக வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாடு



சென்னையில் டேங்கர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் துடிதுடிக்க சாலையில் மரணமடைந்து கிடந்தது, எல்லோருடைய நெஞ்சையும் பதபதைக்க வைத்தது மறக்க முடியாதது. வேகமாக வந்த டேங்கர் லாரி கிண்டி மேம்பாலத்திலிருந்து இறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், பிரேக் பிடிக்க முடியாமல் மாணவிகள் மீது மோதியதுதான் காரணம் என்று கூறப்பட்டது. சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே டேங்கர் லாரி மற்றும் கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் விபத்துகளால்தான் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் போதிய ஓய்வில்லாமல் இரவு–பகலாக வாகனங்களை ஓட்டுவதுதான் விபத்துகளுக்கு காரணம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் மக்களின் குடிநீர் சப்ளைக்காக டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்வதைத் தவிர்க்க இயலாது. ஆனால், வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் போது லாரிகளின் தகுதிச் சான்று, டிரைவரின் லைசென்ஸ், அவருடைய முன்அனுபவம் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்து, லாரிகளை பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குடிநீர் லாரிகளை சாலை விதிகளை மீறியோ, அதிவேகமாக இயக்கினாலோ உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், லாரிகளின் பின்புறம் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட வேண்டும். விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு குடிநீர் வழங்கும் லாரிகள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து, அனைத்து லாரிகளும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவுகள் நிச்சயமாக வரவேற்கப்படத்தக்கதாகும். ஆனால், வடகிழக்கு பருவமழை நேரத்தில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் எப்போதும் செயல்படுத்தவேண்டும். மேலும், இது உடனடியாக செயல்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவிப்புகளை அரசும், போலீசாரும், டேங்கர் லாரிகளோடு நிறுத்தி விடக் கூடாது. ஏனெனில், சென்னை நகரை பொறுத்த மட்டில், 504 டேங்கர் லாரிகள்தான் பெருநகர குடிநீர் வாரியத்திற்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 2002–ம் ஆண்டு முதல் 2015–ம் ஆண்டுவரை, 13 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 10.5 சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 31.3.2016–ந் தேதி நிலவரப்படி, 12 லட்சத்து 13 ஆயிரம் போக்குவரத்து வாகனங்கள் உள்ளன.

போக்குவரத்து வாகனங்கள் என்றால் பஸ்கள், லாரிகள், ஆம்னி பஸ்கள், மேக்சிகேப் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் அடங்கும். அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி என்பது அவசியம் என்றாலும், முதல் கட்டமாக போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் கண்டிப்பாக வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு, குறைந்த பட்சம் நகர்ப்பகுதிகளுக்குள் போகும் போதாவது அதைப் பின்பற்ற வேண்டும் என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். மேலும், ஆங்காங்கு ‘ஸ்பீடு பிரேக்கர்கள்’ என்று அழைக்கப்படும் ‘வேகத்தடைகள்’ விதிகளுக்குட்பட்டு ஏற்படுத்தப்பட வேண்டும். விட்டம், அகலம், உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விதி இருக்கிறது. இந்த விதிமுறைப்படி, வேகத்தடைகள் அமைக்கப்பட்டால், வாகனங்களின் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் என்ற அளவில் குறைந்து விடும். வேகத்தடை மற்றும் வேகக்கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்ட துறைகள் தீவிர நடவடிக்கை எடுத்தாலே, விபத்துகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து விடலாம். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மார்க்கெட்டுகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த வேகத்தடைகள் அமைப்பதே சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.