Latest News

ரூபாய் நோட்டு விவகாரம் மிகப்பெரிய ஊழல்: பிரதமர் மோடி பதவி விலகக்கோரி தொடர் போராட்டம் மம்தா பானர்ஜி அறிவிப்பு


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மிகப்பெரிய ஊழல் என்றும், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகக்கோரி 1–ந் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:–

1–ந் தேதி போராட்டம்\
 
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்துள்ள மிகப்பெரிய ஊழல். இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகக்கோரி மாநிலம் முழுவதும் ஜனவரி 1–ந் தேதி போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

போராட்டத்தின் முழக்கம் ‘மோடியை நீக்குவோம், நாட்டை காப்போம்’ என்பதாக இருக்கும். போராட்டம் தொடங்கும் ஜனவரி 1–ந் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் அறிவிப்பு இல்லை 
 
சமீபத்தில் நடந்துமுடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் பாராளுமன்றத்திலோ, மேல்–சபையிலோ ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இது அரசியல்சட்டத்தை மீறுவதாகும். இதுதொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம்.
இந்த கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகள் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற விவகாரம் குறித்த பிரச்சினையை எழுப்ப முயன்றனர். அதுதொடர்பான எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க ஆளுங்கட்சியினர் அனுமதிக்கவில்லை.

பதவி விலக வேண்டும் 
 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் 10 கோடி இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விவசாயிகளால் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை, 100 நாள் வேலை நிறுத்தப்பட்டுள்ளது, இன்னும் இதுபோன்ற தொடர் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவை மக்கள் தான் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மோடி அரசு நாட்டில் உள்ள அனைத்தையும் அழித்து வருகிறது. இந்த சூழ்நிலைக்கு மோடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையென்றால் மக்கள் அவரை பதவியில் இருந்து விலகும்படி வற்புறுத்துவார்கள்.

அரசை நடத்துவது யார்? 
 
மத்திய அரசு அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. ரூபாய் நோட்டு விவகாரத்தால் ஜனநாயகம் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. இதுவரை 126 முறை முடிவுகளை மாற்றியிருக்கிறார்கள். அதிகாலை முதல் இரவு வரை புதிய அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது சில நேரம் இந்த அரசை வழிநடத்துவது யார்? என்று என் மனதில் தோன்றும். அலிபாபாவும் மற்ற 4 பேரும் சேர்ந்து தான் இதனை நடத்துகிறார்கள்.

மோடி அரசின் அழிக்கும் நடவடிக்கை காரணமாக பல மாநில அரசுகள் மற்றும் பொதுப்பணியில் உள்ளவர்கள் மத்திய அரசின் நிறுவனங்களால் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்.

மோடி மீது எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஆனால் ‘மோடி அரசை நீக்குவோம், நாட்டை காப்போம்’ என்பது ஜனவரி 1–ந் தேதியில் இருந்து புதிய வகையில் எங்கள் போராட்டமாக தொடங்கி, அடுத்த அறிவிப்பு வரும்வரை ஜனவரி 8–ந் தேதி வரை நடைபெறும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.