உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து
முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் நேற்று திடீரென்று நீக்கப்பட்டார். அங்கு
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சியின் தலைவர்
முலாயம் சிங் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார்.
403 உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு விரைவில் மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடக்க இருக்கிறது.
வேட்பாளர் தேர்வில் மோதல்
ஆளும் சமாஜ்வாடி கட்சியில், தலைவர் முலாயம் சிங்கிற்கும், அவருடைய
மகனான முதல்–மந்திரி அகிலேஷ் யாதவிற்கும் இடையே வேட்பாளர்களை தேர்வு
செய்வதில் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக,
தனது சித்தப்பா சிவபால் சிங், கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்
அகிலேஷ் யாதவுக்கு உடன்பாடு இல்லை.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங்கை அண்மையில் சந்தித்து பேசியும் பலன் இல்லாமல் போனது.
போட்டி பட்டியல்
கடந்த புதன்கிழமை, சிவபால் சிங்குடன் சேர்ந்து சமாஜ்வாடியின் 325
பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை முலாயம்சிங் வெளியிட்டார். இதில்
அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் குறைந்த அளவிலேயே இடம்பெற்று இருந்தனர். இதனால்
அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் இரவு தனது தரப்பில்
அதிரடியாக 235 வேட்பாளர்களுக்கான முதல் பட்டியலை வெளியிட்டார்.
சகோதரர் தாக்கு
இந்நிலையில், நேற்றும் அதிரடி சம்பவங்கள் அரங்கேறின. முலாயம்சிங்கை
அவருடைய ஒன்றுவிட்ட சகோதரரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ராம் கோபால்
யாதவ் பகிரங்கமாக விமர்சித்தார்.
பருகாபாத்தில் இருந்து அவர்
வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சியின் இன்றைய நிலைக்கு முலாயம்சிங்கும்,
சிவபால் சிங்கும்தான் காரணம். இந்த பிரச்சினை இப்போதைக்கு ஓயாது. நான்
அகிலேஷ் யாதவுடன் கைகோர்த்து செயல்படுவேன். கட்சியின் சைக்கிள் சின்னம்
யாருக்கு என்பதை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்’ என்று கூறிஇருந்தார்.
பின்னர், தலைநகர் லக்னோவுக்கு திரும்பிய அவர், அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதே
சமயத்தில், கட்சிக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதற்காக,
அகிலேஷ் யாதவுக்கும், கட்சிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதற்காக ராம்
கோபால் யாதவுக்கும் முலாயம்சிங் நோட்டீஸ் அனுப்பினார். அவர்கள் மீது ஏன்
நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு உடனடியாக விளக்கம் அளிக்குமாறு அதில்
கூறப்பட்டு இருந்தது.
அவசர கூட்டம்
இதையடுத்து, இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்டும் வேலையில்
இறங்கினர். கட்சியின் தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை)
அகிலேஷ் யாதவ் அவசரமாக கூட்டி இருக்கிறார். லோகியா சட்ட பல்கலைக்கழகத்தில்
நாளை காலை 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர்
என்ற முறையில், இதற்கான அறிவிப்பை ராம் கோபால் யாதவ் வெளியிட்டார்.
தந்தை
முலாயம்சிங்கிடம் இருந்து சமாஜ்வாடி கட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் இந்த
கூட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.
கூட்டத்தில், அவர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவருக்கு
நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். முலாயம்சிங், தலைமை புரவலர் என்ற புதிய
பதவிக்கு மாற்றப்படுவார் என்றும் அவர்கள் கூறினர்.
மகனுக்கு
போட்டியாக, முலாயம்சிங்கும், தான் அறிவித்த 393 வேட்பாளர்கள் பங்கேற்கும்
கூட்டத்தை இன்று (சனிக்கிழமை) நடத்த ஏற்பாடு செய்தார். இந்த மோதலால்,
சமாஜ்வாடி கட்சி எந்த நேரத்திலும் உடையும் சூழ்நிலை ஏற்பட்டது.
அகிலேஷ் யாதவ் அதிரடி நீக்கம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மகன் அகிலேஷ் யாதவையும், ஒன்றுவிட்ட
சகோதரர் ராம் கோபால் யாதவையும் முலாயம்சிங் கட்சியை விட்டு நீக்கினார்.
இருவரையும் 6 ஆண்டு காலத்துக்கு கட்சியை விட்டு நீக்கி வைப்பதாக
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
அப்போது, முலாயம்சிங் கூறியதாவது:–
கட்சியை
விட யாரும் பெரியவர்கள் அல்ல. அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ் ஆகிய
இருவரும் கட்சியை உடைக்க முயன்றதற்காகவும், ஒழுங்கீனத்துக்காகவும்
தண்டிக்கப்பட்டுள்ளனர். அகிலேஷ் யாதவ் எப்படி வேட்பாளர் பட்டியலை
வெளியிடலாம்? அவர் தனது சட்டவிரோத செயல்பாடுகளால், தனது எதிர்காலத்தை
குழிதோண்டி புதைத்து விட்டார். இத்தகைய சட்டவிரோத காரியங்களில் இருந்து
கட்சியை காப்பாற்ற இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்.
கோஷ்டி அரசியல்
அகிலேஷ் யாதவ், கட்சிக்கோ, மாநிலத்துக்கோ எந்த சேவையும்
செய்யவில்லை. அவரை நான் தான் முதல்–மந்திரி ஆக்கினேன். நான்
முதல்–மந்திரியாக இருந்தபோது, அயோத்தி பிரச்சினையை அணுக வேண்டி இருந்தது.
மசூதியை காப்பதற்காக, ஆட்சியையே தியாகம் செய்தேன். அதுபோன்ற அனுபவம்,
அகிலேஷ் யாதவுக்கு ஏற்பட்டுள்ளதா?
முதல்–மந்திரியாக இருப்பவர்,
சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால், அவர் கோஷ்டி அரசியலில்
ஈடுபட்டு, கட்சியை உடைக்க முயன்றார்.
சட்டவிரோதம்
அகிலேஷ் யாதவின் அரசியல் வாழ்க்கைக்கு ராம் கோபால் யாதவ் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இது, அகிலேஷ் யாதவுக்கு புரியவில்லை.
ராம்
கோபால் யாதவ், ஒழுங்கீனத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, கட்சிக்கு பெரும்
தீங்கு இழைத்துள்ளார். அவர் மீது இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இருவரும்
தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டுவது சட்டவிரோதம். கட்சி தலைவரைத்
தவிர, வேறு யாரும் அந்த கூட்டத்தை கூட்ட முடியாது. கட்சி நிர்வாகிகள்
யாரும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது.
புதிய முதல்–மந்திரி
முதல்–மந்திரியாக உள்ள அகிலேஷ் யாதவ், கட்சியை விட்டு
நீக்கப்பட்டதால், புதிய முதல்–மந்திரியை நாங்கள் விரைவில் தேர்வு செய்வோம்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி விவாதிக்க கட்சியின் தேசிய செயற்குழு
கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
பேட்டியின்போது, அவருடைய தம்பி சிவபால் சிங் யாதவ் உடன் இருந்தார்.
சுவரொட்டி எரிப்பு
முதல்–மந்திரி பதவியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்கப்பட்டதை
தொடர்ந்து ஆளும் சமாஜ்வாடியில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டி
உள்ளது.
அகிலேஷ் யாதவ் நீக்கப்பட்ட தகவல் வெளியானவுடன் அவரது
ஆதரவாளர்கள் 500–க்கும் மேற்பட்டோர், அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தனர்.
அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகவும், சிவபால் சிங் யாதவுக்கு எதிராகவும்
கோஷமிட்டனர். சிவபால் சிங்கின் சுவரொட்டியையும் எரித்தனர்.
நிலைமை பதற்றமாக இருந்ததால், போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர்.
மேலும், தன்னை கட்சியை விட்டு நீக்கிய செயல், சட்டவிரோதமானது என்று ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.
No comments:
Post a Comment