ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட்சியையும், ஆட்சியையும் அதிமுக
காப்பாற்றட்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஏதோ
சூன்யம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும் என்றும்
அதற்காகவே புது அவதாரம் எடுத்துள்ளவர்கள் போல தினமும் சிலர் உளறுவதும்,
அதை ஏதோ பிரகடனம் போல் ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழ்வதுமாக
உள்ளனர்.
இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. அரசியல்
பெயரில், போர்வைக்குள் நடைபெற்ற அத்தனையும் ஆரிய-திராவிட இனப்போரட்டம்தான்'
என்று தந்தை பெரியார் சொல்வார். இதை அப்பட்டமாக சில ஏடுகளும், மற்ற
மக்கள் ஆதரவைப் பெற்று பெரியார் மண்ணான தமிழகத்தில் காலூன்றிட முடியாத
குறுக்குவழி அரசியலில், கனவு காணும் சில கட்சிகளும் உள்ளன. பிரச்சினையாக்க
முயல்கின்றன.
இதில், அரசியல் மீன் பிடிக்க வாடி நிற்கும் கொக்குகள் தங்களிடம் உள்ள
அதிகாரப் பலன்களை காட்டி அச்சுறுத்தலாம். எம்.ஜி.ஆர். காலத்திலேயே நடந்த
பழைய முறைதான் இது. ஆனால், அதிமுகவின் பலம் என்பது தமிழக சட்டமன்றத்தில்
மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 50 உறுப்பினர்களின்
கட்டுப்பாடு என்ற விஸ்வரூபத்தின் முன் எந்த அதிகாரமும், அச்சுறுத்தலும்
சாதாரணம் என்பதை ஜெயலலிதாவின் வீரஞ்செறிந்த நிலைப்பாட்டை எண்ணிக்கொண்டால்,
தாமே தம் பலத்தை அதிமுகவினர் உணர முடியம்.
அதிமுக மணல் வீடு அல்ல. கோட்டை என்பதைக் காட்ட அந்த சகோதரர்கள்
எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும் அய்யா, அண்ணா என்று கூறிய
கட்டுப்பாட்டுடன், ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்தால், இரும்பை விழுங்க
எறும்புகளால் முடியாது என்று உணர்த்த முடியும். இச்சூழலில் தமிழக
எதிர்கட்சியான திமுக மிகுந்த முதிர்ச்சியுடன், குறுக்கு வழிகளில் எதற்கும்
ஆசைப்படாமல் கண்ணியத்துடன் அரசியல் நடத்துவது பாராட்டுக்குரியது.
மறைந்த ஜெயலிதாவை அறிந்தவர், அளந்தவர் - அவருடன் பல்வேறு அனுபவங்களைப்
பகிர்ந்து பக்குவப்பட்டவர் என்ற கனிந்த நிலையில் முதிர்ச்சி யுடன் உள்ள
ஒருவர் - அ.தி.மு.க.வின் சோதனையான இந்த காலகட்டத்தில் திருமதி சசிகலா
அவர்களைத் தேர்வு செய்வது, அடுத்தடுத்து வரவிருக்கும் சோதனை களையெல்லாம்
சந்திக்கும் சித்தத்துடன் இருக்க ஒரே வழி - தடுமாற்றமோ, குழப்பமோ
உங்களுக்கு இல்லை; உருவாக்க முயலும் இனப் பகைவர்களை, அரசியல் எதிரிகளை
மிகுந்த எச்சரிக்கையுடன் அடையாளம் கண்டு நடந்துகொள்வதுதான் முக்கியம்.
சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று
அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக
இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா?
நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம்
ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment