சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் 3 தொகுதிகளில் அதிக அளவில்
வாக்குகள் பதிவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர்
தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத்
தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம்
கொடுத்ததாக எழுந்த புகார் காரணமாக தஞ்சை, கரூர் மாவட்ட அரவக்குறிச்சி
தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இன்று
வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் அதிமுக உறுப்பினர் மரணம் அடைந்ததால் அங்கும்
இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும்
அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலபாஜக
தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றும்
அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்து
வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இத்தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தாக
அறிந்து வருத்தம் அடைந்ததாகவும் அவர் கூறினார். இந்த தேர்தல் அமைதியாக
நடந்து முடிய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழிசை
சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.


No comments:
Post a Comment