Latest News

பணப் பஞ்சம்... மத்திய அரசுக்கு எதிராக பாரத பந்த் - தமிழகம் நாளை ஸ்தம்பிக்குமா?

 
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் கடந்த 8ம் தேதி அறிவித்தார். இது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள பெரும் பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமல் மூடிக்கிடக்கின்றன. சில ஏ.டி.எம்.கள் மட்டும் செயல்படுகிறது. அதிலும் போதிய அளவு பணம் இல்லாமல் தீர்ந்து விடுகிறது. ரூபாய் நோட்டு பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிளப்பி அமளியில் ஈடுபட்டதால் ஒருவாரமாக சபை நடவடிக்கைகள் முடங்கியது. பணப்பிரச்சினையை மையமாக வைத்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை கண்டித்து இடது சாரி கட்சிகளும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் நாளை திங்கட்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 


திமுக பெருந்திரள் ஆர்பாட்டம் தமிழகத்தில் நாளை மத்திய- மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இடம் மாற்றப்பட்டு சென்னை ராஜாஜி சாலையில் கலெக் டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.


எதிர்கட்சிகள் ஆதரவு இதே போல் மாவட்ட தலை நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை கலந்து கொள்கின்றன.


மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை மதுரையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்


ஜி.கே. வாசன் ஆதரவு ரூபாய் 500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு தமாகா ஆதரவு தெரிவிக்கிறது என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கூலி தொழிலாளிகள், சிறு, குறு தொழில்முனைவோர், வணிகர்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசின் முன்னேற்பாடில்லாத இத்திட்டத்தை கண்டித்தும், தற்போது நிலவும் பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை பழைய ரூபாய் 500, 1,000 நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்க கோரியும் வரும் 28ஆம் தேதி நடத்தப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா முழு ஆதரவு அளிக்கும் என்றும் வாசன் கூறியுள்ளார்.


கடையடைப்பு இல்லை 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நவம்பர் 28 தேதி கடையடைப்பு செய்வது என்று அறிவித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த கடையடைப்பு தற்காலிகமாக கைவிடப்படுகிறது என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இடதுசாரி அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பார்கள் என்றும் வெள்ளையன் அறிவித்துள்ளார்.


கேரளாவில் முழு அடைப்பு கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வரும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா


பீகாரில் எதிர்ப்பும் ஆதரவும் பீகார் மாநிலத்தில் நாளை வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


மேற்கு வங்கத்தில் தனித்தனியே மேற்கு வங்காளத்தில் நாளை இடதுசாரி கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. கொள்கை அளவில் ரூபாய் நோட்டு விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தாலும் வேலை நிறுத்தத்தை அக்கட்சி ஆதரிக்கவில்லை.


உ.பியில் கருத்து வேறுபாடு உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்சினையில் அக்கட்சியின் எம்.பி. நரேஷ் அகர்வால் மத்திய அரசை கடுமையாக சாடினார். ஆனால் பொது செயலாளர் அமர்சிங் பிரதமர் மோடி நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

கர்நாடகாவில் ஆதரவு இல்லை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஆதரவு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசை கண்டித்து நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக அரசின் ஆதரவு இல்லை என்றும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நானும் ஒரு குடிமகன். சாதாரண குடிமகனான நான், பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பதற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் 28-ந்தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் சித்தராமைய்யா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.