Latest News

இந்தியாவில் "பணக் கலவரம்" மூளும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

 
கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு மத்திய அரசு மக்களைத் தள்ளி விட்டுள்ளது. மக்களை விரைவில் அரசு திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மிகப் பெரிய "பணக் கலவரம்" மூளும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் சாலை சாலையாக, சாரை சாரையாக மக்கள் பணம் எடுக்கக் காத்துக் கிடக்கிறார்கள். கடும் வெயிலில் காத்துக் கிடக்கும் மக்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தங்களது சொந்தப் பணத்தை எடுக்கவும், கையில் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டை மாற்றவும்தான் இப்படி மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். பல மணி நேரம் காத்துக் கிடந்தாலும் கூடஅதிகபட்சம் ரூ. 4000 வரை மட்டுமே மக்களால் எடுக்க முடிகிறது ( இப்போது இதை ரூ. 4500 ஆக அரசு உயர்த்தியுள்ளது). அதுவும் கூட பல மணி நேரம் காத்துக் கிடந்தும் கூட பணத்தை மாற்ற முடியாமல் திரும்புவோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏடிஎம்களுக்குப் போனால் அங்கு பெரும்பாலான இடங்களில் அவுட் ஆப் சர்வீஸ் போர்டைப் பார்க்க முடிகிறது. மீறித் திறந்திருந்தாலும் கூட ஒரு நாளைக்கு ரூ. 2000 மட்டுமே எடுக்க முடிகிறது (தற்போது இதை ரூ. 2500 ஆக அரசு உயர்த்தியுள்ளது).

இப்படி கை நிறையக் காசு வைத்திருந்தும் கூட மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டது இந்த அரசு என்ற பெரும் கொந்தளிப்பும், வேதனையும், விரக்தியும் மக்களிடம் பெருகியுள்ளது. ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை நினைத்து பலருக்கு பெரும் மன உளைச்சலே வந்து விட்டது. தினசரி செலவுகளுக்குப் பணம் போதாமல் மக்கள் கையில் இருக்கும் காசை சிக்கனப்படுத்தி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அன்றாடங்காய்ச்சிகளின் நிலைதான் இதில் மிக மோசமாக உள்ளது. டெல்லியில் வங்கிக் கிளைகளில் மக்கள் தாக்குதல்நடத்தும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. பல இடங்களில் மக்கள் கடும் கொந்தளிப்புடன் வாக்குவாதத்தில் மூளுவதைப் பார்க்க முடிந்தது. சீலம்பூர் என்ற இடத்தில் மக்கள் கடும் கொந்தளிப்புடன் ரூபாய் நோட்டுக்களை ஏற்க மறுத்த கடைக்குள் புகுந்து சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டாலும் கூட மக்களின் கொந்தளிப்பைக் கண்டு போலீஸாரே பயந்து போகும் அளவுக்கு நிலைமை உள்ளதாக கூறப்படுகிறது. போதிய அளவுக்கு பணத்தை இருப்பு வைக்காமல் அரசு இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்தது மிகப் பெரிய முட்டாள்தனம் என்றுதான் பலரும் சொல்கிறார்கள். சரியான திட்டமிடல் இல்லை என்பதே சுப்பிரமணியசாமி போன்றோர் கூறும் குற்றச்சாட்டாகவும் உள்ளது. பல இடங்களில் புதிய 2000 ரூபாயைத் தருகிறார்கள். அதை வைத்துக் கொண்டு எங்கு போய் சில்லரை மாற்றுவது என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள். ஒரு பாக்கெட் பால் வாங்கி விட்டு 2000 ரூபாய்த்தாளை நீட்டினால் சில்லரை கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளதாக மக்கள் குமுறுகிறார்கள். நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்தியாவில் பணக் கலவரம் மூளக் கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாக பொருளாதார நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.