நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர்
வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில்
ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4
சுயேச்சைகள் உள்பட 8 பேர் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து
வாக்களித்தனர். 5 மணிக்குப் பின்னரும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள்
வரிசையில் நின்றதால் அவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் அளிக்கப்பட்டது.
நெல்லித்தோப்பு தொகுதியில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 26
வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்
நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே பம்பரமாக சுழன்று வாக்கு
சேகரித்தார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக என்ஆர் காங்கிரஸ்
தலைவர் ரங்கசாமி, தமிழக அமைச்சர்கள் சிவி.சண்முகம், எம்சி.சம்பத்,
நடிகர்கள் ஆனந்தராஜ், சிங்கமுத்து, அனிதாகுப்புசாமி, பாத்திமாபாபு உள்பட
பலர் பிரசாரம் செய்துள்ளனர்.
பதற்றம் நிறைந்த 26 வாக்குச்சாவடிகள்
26 வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாகவே அதிகரிக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, வெயிலில் பாதிப்பு
ஏற்படாமல் இருக்க பந்தல் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சாய்தள வசதிகள்
அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரி சத்யேந்திர சிங், தேர்தல்
அமைதியாக நடைபெற்றதாக அறிவித்தார்.
சின்னச் சின்ன பதற்றம்
பணப்பட்டுவாடா புகார், தேர்தல் விதிமீறல் புகார் காரணமாக பதற்றம் உருவானது.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். பக்கத்து
தொகுதியிலிருந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள்,
அவர்களை வெளியேற்றவேண்டும் என்று மறியல் செய்தனர். அங்கு வந்த
காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.
தோல்வி பயம்
காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி, தோல்வி பயத்தில் கலவரம் செய்கிறார்கள்,
நம்ம ஆளுங்க அமைதியாக இருங்க என்று, காங்கிரஸ் கட்சியினருக்கு
உத்தவிட்டிருக்கிறாராம். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேதகிரி என்பவர்
வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் டோக்கன் கொடுத்துவந்தார். அதைப்பார்த்த
உருளையான்பேட்டை காவல்துறையினர் வேதகிரியை கைது செய்தனர்.
ஆன்லைன் வாக்குப்பதிவு
நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில் தபால் ஓட்டுக்களுக்கு
பதிலாக ஆன்லைன் வாக்குகள் அறிமுகம் செய்யப்பட்டது.
நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த 4 ராணுவத்தினரில் 3 பேர் ஆன்லைன் மூலம்
வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்
ஆன்லைன் மூலம் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:
Post a Comment