நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என இந்திய
வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும் மற்ற பணப் பரிவர்த்தனைகள்
வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத்
தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி
ரூ2.5 லட்சத்திற்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தங்களது பான்
கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு
நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை 4500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சனிக்கிழமை மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த
நிலையில், நாளை முதியவர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படும்
எனவும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் மட்டுமே
மாற்றிக்கொள்ளலாம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஒருநாள் மற்றவர்கள் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என்று
இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வங்கிகள் செயல்படும்
நேரத்தில் மட்டுமே பணம் மாற்றித் தரப்படும் எனவும், மற்ற வங்கி
பரிவர்த்தனைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் இந்திய வங்கிகள் சம்மேளனம்
தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment