500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்னர்,
ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு அதற்கேற்ப வரிவிதிப்புகளை
செயல்படுத்த புதிய வருமானவரிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்
கடும் அமளிக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி இரவில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது
என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு பழைய நோட்டுக்களை வங்கியில்
டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்பவர்கள் கணக்குக்
கேட்கப்படும் என்றும், கணக்கு சரியாக இல்லை என்றால் கறுப்புப் பணமாக
கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்படி கணக்கில் காட்டாத கறுப்பு
பணத்திற்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை
அறிவித்தது. பின்னர், இந்த அறிவிப்பை செயல்படுத்த தற்போதுள்ள வருமான வரி
சட்டத்தில் உரிய அங்கீகாரம் இல்லை. எனவே இந்த முடிவை மத்திய அரசு
கைவிட்டது.
கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது கூடுதாக வரிகளை விதிப்பதில் உள்ள
பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய வருமானவரி சட்டத் திருத்த மசோதாவை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி,
இன்று லோக்சபாவில் இந்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல்
செய்தார்.
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்க்காலக்
கூட்டத்தில் கடும் அமளி நிலவி வரும் சூழ்நிலையில் லோக்சபாவில் இந்த மசோதா
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வருமானவரி சட்டத் திருத்த மசோதாவின் படி, வருமானத்தை
கணக்கில் காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகைக்கு 30
சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலும், அபராதமாக 10 சதவீத வரி
விதிக்கப்படுகிறது. இதுபோக 30 சதவீத வரி மீது 33 சதவீத செஸ் வரியும்
விதிக்கப்படும். இவை அனைத்தையும் கூட்டினால், அதன் மதிப்பு கணக்கிற்கு
மீறியுள்ள பணத்தில் 50 சதவீதமாகும். இந்த தொகையில், 25 சதவீதம் பிரதமரின்
ஏழைகள் நலன் வைப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். நாட்டில் குடிநீர்,
சாலை போன்ற அடிப்படை வசதிகளை அமைக்க அந்த கருப்பு பணத்தை அரசு
பயன்படுத்தும்.
அதேவேளையில், எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டு
வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்துள்ளதை மறைத்தால், வருமான
வரித்துறையினரின் சோதனையில் சிக்கும்போது, கணக்கில் வராத வருமானத்திற்கு 75
சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்த
வருமானத்தின் ஒரு பகுதியை நான்காண்டுகளுக்கு வங்கியில் இருந்து எடுக்க
முடியாது. எனவே சிக்கினால் 85 சதவீத வரியும், தானாக அறிவித்துவிட்டால் 50
சதவீத வரியோடும் தப்பிவிடலாம்.
முன்னதாக இந்த மசோதா குறித்து முடிவு எடுக்க பிரதமர் நரேந்திர மோடி
தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment