தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி
முடிப்பது என்பது சாத்தியமில்லை என்று தமிழகதேர்தல் ஆணையம் சென்னை
உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்து விட்டது. இதனால் இப்போதைக்கு தேர்தலை
நடத்த முடியாத நிலை உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 1,31,794 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 17
மற்றும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மாநில
தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு
பின்பற்றப்படவில்லை என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
கிருபாகரன் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து
செய்தும், வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி விபரங்களை வேட்பு மனுவில்
குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 பரிந்துரைகளை தேர்தல் ஆணையத்திற்கு
உத்தரவாகப் பிறப்பித்தார். டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்த
வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் கூறினார்.
இந்த நிலையில் இந்த ரத்து அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி
தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் ரத்து
அறிவிப்பு நீடிக்கும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு உரிய
பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் பலர் மனுத்
தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி என்.கிருபாகரன்
முன்பு கடந்த 22ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில
தேர்தல் ஆணைய தரப்பு வக்கீரைப் பார்த்து பார்த்து தொடர் கேள்விகளை நீதிபதி
எழுப்பினார்.
மாநில தேர்தல் ஆணைய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் இரு நீதிபதிகள்
கொண்ட அமர்வு, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு
தடை விதிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, தேர்தலை டிசம்பர் 31-ஆம்
தேதிக்குள் நடத்திய முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை
நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை? என்று நீதிபதி கேட்டார்.
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த பின், டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும்
தேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்த என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு மற்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம்
கேட்டார்.
வேட்பாளரின் குற்றப்பின்னணி விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்
என உத்தரவை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க
கால அவகாசம் கோரியதையடுத்து, நவம்பர் 28ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை
ஒத்தி வைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.
தமிழக அரசு மேல்முறையீடு செய்யாத நிலையில் தனது உத்தரவை அமல்படுத்தாதது
குறித்து, வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும்,
மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம்
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித்
தேர்தலை நடத்த இயலாது தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு
நிலுவையில் உள்ளதால் அதற்காக அறிவிப்பாணை வெளியிட கால அவகாசம் இல்லை
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என அரசியல்
கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ள
உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
பிறப்பித்தார்.
No comments:
Post a Comment