முதல்வர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவர் பூரண
நலம்பெற்று வீடு திரும்ப தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும்
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்
ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து சிகிச்சை பெற்று
வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று
திடீர் பயணமாக சென்னை வந்தார். இப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத
திடீர் பயணமாகவே கருதப்படுகிறது.
சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர்
ராகுல் காந்தி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள
அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவின் உடல்நிலை
குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை
குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்திக்கு விளக்கினர். தமிழக
காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன்
மருத்துமனைக்கு வந்திருந்தார்.
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ
மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது
சுமார் 40 நிமிடங்கள் மருத்துவமனைக்குள் இருந்த ராகுல்காந்தி,
மருத்துவமனைக்கு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
அவர், அன்னை சோனியாகாந்தியின் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிக்கவே நான்
சென்னை வந்தேன். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து
மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள்
தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார். சில நிமிடங்கள்
மட்டுமே பேசினாலும் அவருடைய பேச்சு வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலம்
என்பதை பதிவு செய்யும் விதமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல்காந்தியும் ஜெயலலிதாவை காணாமல்
மருத்துவக்குழுவினரிடம் மட்டுமே விசாரித்து விட்டு சென்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment