Latest News

  

அரசு ஊழியர் ஊதிய விவகாரம்: துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு- கருணாநிதி சாடல்

 
அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சி என்றால் "துக்ளக் தர்பார் ஆட்சி" என்பதற்கு ஒரு உதாரணம்? பதில்: தீபாவளியை முன்னிட்டு, அரசு அலுவலர்களுக்கு, அக்டோபர் மாதச் சம்பளம் 28-10-2016 அன்றே வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

வழக்கம் போல 31ஆம் தேதிதான் வங்கிக் கணக்கிலே சம்பளத் தொகை வரவு வைக்கப்படும் என்று தற்போது அரசு கூறிவிட்டது. 28ஆம் தேதியே சம்பளம் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த சுமார் பத்து இலட்சம் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 28ஆம் தேதி சம்பளம் என்று முன்கூட்டியே அறிவித்தது ஏன்? ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாது என்று அதிகாரிகள் இப்போது தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், புதுச்சேரி மாநிலத்தில் முன்கூட்டியே அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதே, அது எப்படிச் சாத்தியமாயிற்று?

ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாதென்றால், எதற்காக அரசு சார்பில் ஓர் அறிவிப்பை முன்கூட்டி தெரி வித்தார்கள்? இதற்குப் பெயர்தான் "துக்ளக் தர்பார்". உதாரணம் போதுமா? மற்றொரு உதாரணம் கூறட்டுமா? ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே சட்டப் பேரவைக்கான 12 குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று, குழுக்களிலே இடம் பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டு, அவரவர்களும் தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று முதல் கூட்டத் தொடரில், இந்தக் குழுக்களை அமைக்க சட்டப்பேரவையிலே உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். கேள்வி : 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது பற்றி அரசு மறு சீராய்வு செய்ய வேண்டுமென்று உயர் நீதி மன்றம் கூறி யிருக்கிறதே? பதில்: உண்மைதான். சிறையிலே உள்ள பி. வீரபாரதி என்ற கைதி, தான் 17 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடுத்த வழக்கில்தான், 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்ட னைக் கைதியை விடுவிக்க மறுத்த உள்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்ததோடு, அவரது கோரிக்கையை உள்துறைச் செயலாளர் எட்டு வாரத்திற்குள் மறு பரிசீலனை செய்ய வேண்டு மென்றும், இதேபோல ஏற்கனவே நிரா கரிக்கப்பட்ட மனுக்களையும் மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக் கிறது. இதே அடிப்படையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களின் விடுதலை பற்றியும் அரசு ஆய்வு செய்யலாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.