Latest News

 
காவிரி விவகாரத்தில் கர்நாடகச் சட்டமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து கர்நாடகத்திற்குப் பெரும் உதவி செய்து விட்டார் என்றும்; தங்கள் தலைக்கு மேல் தொங்கிய கத்தியை அகற்றி விட்டார் என்றும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் கழுத்துக்கே பிரதமர் மோடி கத்தி வைத்து இருக்கின்றார். எனவே, மத்திய அரசை எதிர்த்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரின் குரலும் போர்க்குரலாக எழ வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் எதிர்கால வாழ்வையே பாழ்படுத்துகின்ற வகையில் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மத்திய அரசு, மன்னிக்க முடியாத துரோகம் இழைத்து விட்டது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 1990 ஜூன் 2 ஆம் நாள் மத்திய அரசு அமைத்த நடுவர் மன்றம், காவிரிப் பிரச்னை குறித்து தொடர்புடைய மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி, அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து, தனது இறுதித் தீர்ப்பை, 2007ம் ஆண்டு பிப்ரவரி 19ம் நாள் வெளியிட்டது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அறிவித்தது. ஆனால், மத்திய அரசு ஆறாண்டுக் காலம் இழுத்தடித்து, 2013ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதிதான், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய கடமையைச் செய்யாத நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றும்; அப்படி அமைக்கச் சொல்லும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே கிடையாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்து இருக்கின்றது. இது கற்பனை செய்ய முடியாத பெருங்கேட்டையும், தீமையையும் தமிழகத்திற்கு இழைத்து விட்டது. தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்குக் குடிநீர் இல்லாமலும், டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை அடியோடு பறிகொடுக்கும் நிலைமையும் ஏற்பட உள்ளது. கர்நாடகச் சட்டமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து கர்நாடகத்திற்குப் பெரும் உதவி செய்து விட்டார் என்றும்; தங்கள் தலைக்கு மேல் தொங்கிய கத்தியை அகற்றி விட்டார் என்றும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டின் கழுத்துக்கே பிரதமர் மோடி கத்தி வைத்து இருக்கின்றார். தமிழகத்தின் பெரும்பகுதி பாலைவனமாக, பட்டினிப் பிரதேசமாக மாறுகின்ற பேரபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கின்றது. எனவே, மத்திய அரசை எதிர்த்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரின் குரலும் போர்க்குரலாக எழ வேண்டும். மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள அறப்போராட்டம் வரும் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிஅளவில் திருவாரூரில் நடைபெறும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் பங்கேற்கின்றோம். கூட்டு இயக்கக் கட்சிகளின் தோழர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.