கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யுவராஜின்
நீதிமன்ற காவலை இம்மாதம் 25-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து நாமக்கல்
மாவட்ட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ. இவர்
கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில்
தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதுதொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு
மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சங்ககிரியை சேர்ந்த தீரன்
சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது
செய்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் யுவராஜ் ஜாமீன் கேட்டு
மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் அவருக்கு நிபந்தனை
ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சிறையில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு
சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி
யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 21ந் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து
நாமக்கல் மாவட்ட தலைமை நீதிபதி, யுவராஜின் நீதிமன்ற காவலை அக்டோபர் 4-ந்
தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் யுவராஜூன் நீதிமன்ற
காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த
நாமக்கல் நீதிமன்றம் யுவராஜை 25ம் தேதி வரை காவலில் வைக்க
உத்தரவிட்டுள்ளது.


No comments:
Post a Comment