முதல்வர் பற்றி வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டது தவறானது 
என்று சசிகலா புஷ்பா கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் தமிழ்நாட்டில் 
இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ 
மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி அனு மதிக்கப்பட்டார். முதல்வருக்கு 
தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து
 வதந்தி பரப்பியதாக 8 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. முதல்வரின் 
உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட 
50க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைது 
சம்பவத்திற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அரசியல் 
கட்சித்தலைவர்கள், கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜ்யசபா எம்.பி சசிகலாபுஷ்பா இன்று டெல்லியில் 
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சசிகலா நடராஜன் மீதும், 
தம்பித்துரை எம்.பி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல்வர் பற்றி வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டது தவறானது என்று
 கூறிய சசிகலா புஷ்பா, கருத்து சுதந்திரம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற 
சந்தேகம் எழுவதாக கூறினார். தேவையின்றி காவல்துறை வழக்கு பதிவு செய்வதாக 
குற்றம் சாட்டிய அவர், தொடர்ச்சியாக தமக்கு மிரட்டல் வருவதாகவும் கூறினார்.
திருச்சி சிவா உடன் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து 
ஜெயலலிதா போயஸ்கார்டனுக்கு அழைத்து விளக்கம் கேட்டார். இதனையடுத்து 
ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, கட்சித்தலைமை அடித்தாக குற்றம் 
சாட்டினார். ராஜ்யசபாவில் பேசிக்கொண்டிருந்த போதே, அதிமுகவை விட்டு 
நீக்கப்பட்டார். அன்றைய நாள் முதல் இதுவரை தொடர்ந்து சசிகலா நடராஜன் மீது 
குற்றம் சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment