முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற்று திரும்ப வேண்டி அதிமுக
முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட இருவர் ராமேஸ்வரம் கடலில் மிதந்தவாறு
பிரார்த்தனை செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும்
காயச்சல் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும்
ஒருசில நாட்கள் மருத்துவமனையில் அவர் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என
அப்பல்லோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது. ஆனால், 9 நாட்கள்
ஆகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி அதிமுக
தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை
வளாகத்திலும் யாகங்கள் நடத்தி தொண்டர்கள் பிரார்த்தனை செய்து
வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, ராமேஸ்வரத்தில்
கடலில் மிதந்தவாறு பிரார்த்தனை செய்தார் சோழவந்தான் தொகுதி முன்னாள்
எம்.எல்.ஏ. கருப்பையா.
சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான கருப்பையா. நீரில் மிதந்தவாறு
ஆசனங்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர். அவ்வப்போது தனது தொகுதியில் உள்ள
குளம், ஊரணிகளில் நீரில் மிதந்து ஜல கிரிடை செய்வதை வழக்கமாக
வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில்
அடைக்கப்பட்ட போது அதில் இருந்து மீண்டு வர வேண்டி சோழவந்தானில் உள்ள
கோயில் குளத்தில் ஜலகிரிடை செய்து வேண்டுதல் நடத்தி, அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தார்.
இந்நிலையில், தற்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் பசுமலை
என்பவருடன் சேர்ந்து, மஹாளய அமாவாசை தினமான நேற்று ராமேஸ்வரம் அக்னி
தீர்த்த கடலில் கருப்பையா ஜல கிரிடை செய்து பிரார்த்தனை செய்தார். சுமார்
30 நிமிடங்கள் இருவரும் கடலில் மிதந்தவாறு முதல்வருக்காக பிரார்த்தனையில்
ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment