Latest News

  

தமிழகத்துக்கு இன்று முதல் 6 நாட்கள் தண்ணீர் தரவேண்டும் கர்நாடக மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாளில் அமைக்க மத்திய அரசுக்கு கட்டளை

தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் இன்று முதல் 6 நாட்கள் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்குமாறு மத்திய அரசுக்கு கட்டளையிட்டது.

புதுடெல்லி,


சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் கடந்த செப்டம்பர் 21–ந் தேதியில் இருந்து 27–ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆனால், இந்த உத்தரவை அடுத்த ஆண்டு ஜனவரி 31–ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடுமாறு கோரி கர்நாடக அரசு திருத்த மனு தாக்கல் செய்தது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால மனு தாக்கல் செய்தது.

டெல்லியில்
பேச்சுவார்த்தை

இந்த மனுக்களை செப்டம்பர் 27–ந் தேதி  விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளை மத்திய அரசு அழைத்து பேசவேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி நேற்று முன்தினம் டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

விசாரணை

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, வியாழக்கிழமையன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்பதையும் கோர்ட்டுக்கு தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம்

அப்போது நீதிபதிகள், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முகுல் ரோகத்கி பதில் அளிக்கையில், ‘‘இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், கோர்ட்டு உத்தரவின் படி 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடும்’’ என்றும் கூறினார்.

அப்போது, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள அம்சங்களை நிறைவேற்ற வேண்டியது காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி என்றும், எனவே நதிநீர் பங்கீடு பற்றி அந்த வாரியம் பரிந்துரைக்கும் என்றும் கூறிய நீதிபதிகள், ‘‘இது குறித்து உங்கள் கருத்து என்ன?’’ என்று கர்நாடக அரசு தரப்பில்
ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமனிடம் கேட்டனர்.

கடிதங்கள் தாக்கல்

உடனே பாலி நாரிமன், கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா தனக்கு எழுதிய கடிதம் மற்றும் அவருக்கு தான் அனுப்பிய பதில் ஆகிய இரண்டையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த கடித விவரத்தை பாலி நாரிமன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அதற்கு பிறகு நடந்த விசாரணையின் போது அவரும், கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மற்ற வக்கீல்களும் கோர்ட்டில் எதுவும் வாதாடாமல் மவுனமாக இருந்தனர்.

தமிழக அரசு வக்கீல்

பின்னர் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டேயிடம் நீதிபதிகள், உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

அதற்கு சேகர் நாப்டே, ‘‘நாங்கள் ஒன்றும் கூற விரும்பவில்லை. அவர்கள் (கர்நாடகம்) தொடர்ச்சியாக கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று பிடிவாதமாக இருக்கின்றனர். கோர்ட்டை அவமதிக்கின்றனர். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு நாங்கள் ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் சொல்ல விருப்பம் இல்லை. நாங்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறோம். அதனால் இங்கு நாங்கள் கூறுவதற்கு எதுவும் இல்லை’’ என்று கூறினார்.

அப்போது நீதிபதிகள், ‘‘பாலி நாரிமன் தான் எதுவும் வாதாடப்போவது இல்லை என்று கடிதம் தாக்கல் செய்து இருக்கிறார். சேகர் நாப்டேயும் தங்கள் தரப்பில் ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் கூற முடியாது என்று சொல்கிறார். உங்கள் கருத்து என்ன?’’ என்று அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியிடம் கேட்டார்.

அதற்கு அட்டார்னி ஜெனரல், ‘‘மத்திய அரசும் இறுதி முடிவை கோர்ட்டிடமே விட்டு விடுகிறது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டின் முடிவை ஏற்றுக்கொண்டாக வேண்டும்’’ என்று கூறினார்.

நீதிபதிகள் உத்தரவு

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:–

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்க தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் நிபுணர்களின் பெயர்களை நாளை (இன்று) பிற்பகல் 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இது குறித்து மத்திய அரசு உடனடியாக இந்த மாநிலங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

வருகிற 4–ந் தேதிக்குள் (செவ்வாய்கிழமை) மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும் அதன் உறுப்பினர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று உண்மை நிலவரத்தை கண்டறிந்து கோர்ட்டுக்கு 6–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தண்ணீர் திறக்க வேண்டும்

அரசியல் சட்டப்பிரிவு 144–ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டின் ஆணைக்கு கண்டிப்பாக கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக கர்நாடக அரசு அப்படி நடந்துகொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியதால் மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, தமிழகத்துக்கு 1–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் கர்நாடகம் கண்டிப்பாக தண்ணீர் திறந்து விடவேண்டும். கர்நாடக அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநில சட்டசபை தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தாலும், தமிழகத்துக்கு கண்டிப்பாக தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. அது நிறைவேற்றப்படவில்லை.

கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்

கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியம் தன்னுடைய அறிக்கையை இந்த கோர்ட்டுக்கு தாக்கல் செய்யும் வரை கர்நாடகம் இந்த உத்தரவை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை அவர்கள் எந்த நிலையிலும் எடுக்கக்கூடாது. சட்டத்தையும், நீதியையும் அவர்கள் மதித்து நடக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால் கண்டனத்துக்கு உள்ளாக நேரிடும்.

இந்த வழக்கு மீண்டும் வருகிற 6–ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.