Latest News

உள்ளாட்சி தேர்தலுக்கு 10 வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையருடன், தமிழக டி.ஜி.பி. ஆலோசனை

 
உள்ளாட்சி தேர்தலுக்கு 10 வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தமிழக டி.ஜி.பி.(பொறுப்பு) டி.கே.ராஜேந்திரனுடன் மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் ஆலோசனை நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தல் 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தமிழக டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் த.சு.ராஜசேகர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குனர் கே.மகரபூஷணம், ஊரக வளர்ச்சி–ஊராட்சிகள் துறை இயக்குனர் கே. பாஸ்கரன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் அன்புச்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

10 வகை ஏற்பாடுகள் 

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிப்பதற்குரிய ஏதுவாக செய்ய வேண்டும் என்று 10 வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனிடம் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கேட்டுக்கொண்டார்.

அதன் விபரம் வருமாறு:–

* வாக்குச்சாவடிகளுக்கும், வாக்குச்சீட்டு பகிர்வு மையங்கள், வாக்குச்சீட்டுகள், பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* அரசு அச்சகம் மற்றும் பிற அச்சகங்களில் இருந்து வாக்குச்சீட்டுக்களை பகிர்வு மையங்கள் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

* சிறப்பு காவலர்கள், ஊர்க்காவல் படையினரையும், பிறரையும் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

மது விற்பனையை... 


* சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க காவல்துறையினர் தொடர்பு எண்களை வழங்க வேண்டும்.

* தேர்தல் நன்னடத்தை விதிகளை உறுதியாக நடைமுறைப்படுத்துவதற்கு பறக்கும் படையுடன் காவல்துறை அதிகாரிகள் உடன் செல்ல வேண்டும்.

* சமுதாயத்தின் பலவீனமான பிரிவினரைக் கட்டாயப்படுத்துவதையும், அச்சுறுத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* துப்பாக்கிகள் மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். முறைகேடான சட்டவிரோதமான ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

* தடை செய்யப்பட்ட காலத்தில் மது விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்.

* மாநில எல்லைகளையும் கண்காணிக்க வேண்டும்.

மேற்கண்ட விவரங்களை அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மண்டல காவல்துறை துணை தலைவர்கள் உள்பட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனை, தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் கேட்டுக்கொண்டார்.

டி.ஜி.பி. பேட்டி 

கூட்டம் முடிந்தவுடன் டி.ஜி.பி.ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘ தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.