வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில் ராஜ்யசபா எம்.பி சசிகலா
புஷ்பாவை நவம்பர் 2ம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்பி
சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை
இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெல்லை அருகே சுகந்தி என்ற வழக்கறிஞர் வீடு அண்மையில் அடித்து
நொறுக்கப்பட்டது. சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஹரி என்பவர் உள்பட 3
பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி சசிகலா
புஷ்பாவின் வீட்டில் இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய
இருவரும் வீட்டு வேலை செய்து வந்தனர். அப்போது, சசிகலா புஷ்பா
குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி
மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் புகார்
அளித்தனர்.
இதன்பேரில் சசிகலாபுஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன்
பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் புகார் கூறிய பணிப்பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளையைச்
சேர்ந்த வக்கீல் சுகந்தி ஜெய்சன் ஆஜராகி வந்தார். கடந்த செப்டம்பர் 11 ஆம்
தேதி சுகந்தி ஜெய்சனின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல்
நடத்தினர்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலா புஷ்பாவின்
ஆதரவாளர்களான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி,
ராமலிங்கம், சித்ராகுமார் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர
திலகன், மகன் பிரதீப்ராஜா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மனு தாக்கல் செய்தனர்.
அதில், கைது செய்யப்பட்டுள்ள மூவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களை
வழக்கில் சேர்க்க போலீஸார் திட்டமிட்டு உள்ளனர். வக்கீல் வீட்டில்
தாக்குதல் நடத்தியவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடக்கும் செயல். எனவே இந்த வழக்கில் இருந்து
மூவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை
விசாரித்த நீதிபதிகள், சசிகலா புஷ்பாவை நவம்பர் 2ம் தேதிவரை கைது செய்ய தடை
விதித்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment