தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம்
தேர்தல் நடைபெறும் என்றும் அதே நாளில் திருப்பரங்குன்றம் சட்டசபை
தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல்
நடைபெற்றது. அப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதனால் அங்கு தேர்தல் நடத்துவதை நிறுத்த இந்திய தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டது. பின்னர் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலே
ரத்து செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே
வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல்
உடல் நலக்குறைவால் காலமானார். அவர் பதவி ஏற்கும் முன்னரே காலமானதால்
திருப்பரங்குன்றம் தொகுதி காலியானது. இதனையடுத்து இந்த தொகுதிக்கு தற்போது
இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த மூன்று தொகுதிகளுக்கும்
நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 3ம் தேதி
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுக்களை வாபஸ் பெற
நவம்பர் 5 கடைசி தேதியாகும். நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவும், நவம்பர்
22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.


No comments:
Post a Comment