கர்நாடக அணைகளில் குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால்
தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பில்லை என சித்தாரமையா திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம்
உத்தரவிட்ட நிலையில், பெங்களூரில் இன்று காலை அனைத்து கட்சி கூட்டம்
நடந்தது. அதைத் தொடர்ந்து பிற்பகலில் கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டம்
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர்
செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில்
தமிழகத்திற்கு நீர் திறக்க நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து
விவாதித்தோம்.
கர்நாடகா அணைகளில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால்
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. இந்த முடிவு அனைத்து கட்சி
கூட்டம், அமைச்சரவை கூட்டத்தில் பேசி எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும்
தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியே கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.
6000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கருத்து அடுத்த
விசாரணையில் மாற்றியமைக்கப்படலாம்.
டெல்லியில் நாளை மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில்
நடைபெறும் முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.
பாட்டீல், தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள்
உள்பட 5 பேர் பங்கேற்கின்றனர். அதில் நானும் பங்கேற்கிறேன். இதில்,
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி உமாபாரதியிடம்
விளக்குவேன். தண்ணீர் திறக்க மறுப்பது குறித்தும் அவரிடம்
எடுத்துரைக்கப்படும். அதன் பின்னரே தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது
குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment