Latest News

  

“ஹேப்பி பர்த்டே சுவாதி... உண்மை ஒரு நாள் வெளிவரும்”... வைரலாகும் அக்காவின் உருக்கமான கடிதம்!



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதிக்கு இன்று 25வது பிறந்ததினம். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவரது சகோதரி, 'உண்மை ஒருநாள் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக' தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் பொறியாளர் சுவாதி. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் இந்த கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

பல்வேறு குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த பத்து தினங்களுக்கு முன்னர் சிறை வளாகத்திலேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சுவாதிக்கு இன்று 25வது பிறந்ததினமாம். இதையொட்டி அவரது சகோதரி நித்யா தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதிய கடிதம் ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் கடிதத்தில் அவர், "ஓர் ஊரில் எப்போதுமே தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய நண்பர்கள், ஒருநாள் அவளுக்கு குட்டித் தங்கை ஒருத்தி பிறக்க இருப்பதாகக் கூறினார்கள். தங்கை நல்லபடியாகப் பிறக்கவேண்டும் என்று அவளும் கடவுளிடம் தினமும் வேண்டிக்கொண்டாள். தங்கையும் பிறந்தாள். தங்கையும் அவளும் எலியும் பூனையும் போலத்தான் எப்போதும் எதற்காகவும் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஆனால், ஒருவர் மீது ஒருவர் வைத்த பாசத்துக்கும் அன்புக்கும் அளவே இல்லை. அடித்துப்பிடித்து சண்டை போட்டாலும் வெளியே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை. அந்தக் குடும்பம் அழகாகச் செழித்தது.

இந்த நிலையில்தான், ஒருநாள் நுங்கம்பாக்கத்திலிருந்து அவளது தங்கை தாக்கப்பட்டாள் என்கிற தகவல் வந்தது. கடவுளே! அது என் தங்கையாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றாள் இவள். ஆனால் வேண்டியது பலனளிக்கவில்லை. பிஞ்சுத் தங்கை ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இழப்பை மறந்து மீண்டுவர அந்தக் குடும்பம் எவ்வளவோ முயற்சித்தது. ஆனால், விதி வேறாக இருந்தது. செயற்பாட்டாளர்கள் எனப்பட்டவர்களும், கட்சி ஆட்களும், முகம், பெயர் தெரியாதவர்களும்கூட அவளைப்பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் தவறாகவும், இழிவாகவும் சித்தரிக்கத் தொடங்கினார்கள். ஆனால், உண்மை என்றாவது நிச்சயம் வெளிவரும் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். உண்மை ஒரு புறம் இருக்கட்டும், காலத்திடம் எப்போதுமே அனைத்துக்குமான பதில் இருக்கிறது. ஆனால், சுவாதி எப்படியாவது மீண்டும் எங்களிடம் ஏதோ ஒருவிதத்தில் திரும்பி வா. பிறந்தநாள் வாழ்த்துகள் உனக்கு!" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.