பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக
விவசாயிகள் மாண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள்
போராட்டத்தால் மைசூரு - பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் மாண்டியா -
பெங்களூரு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில்
பெங்களூருவில் கலவரம் ஏற்படுவதை தடுக்க காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி
144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் செப்டம்பர் 27ம்
தேதி வரை 6,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை கர்நாடகா
ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடகா அரசு சிறப்பு
சட்டசபையைக் கூட்டி காவிரி நீர் குடிநீருக்கு மட்டும்தான் என ஒரு
தீர்மானத்தை நிறைவேற்றியது.
கர்நாடகா புதிய மனு
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை புதியதாக ஒரு மனுவைத் தாக்கல்
செய்தது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில்
திருத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கடந்த 20ம் தேதி பிறப்பிக்கப்பட்ட
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்று கூறியுள்ளது.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில்
தான் திறக்க இயலும் என்று கர்நாடக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.
தமிழகம் பதில் மனு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பதில் மனு ஒன்றைத் தாக்கல்
செய்துள்ளது. அதில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி காவிரியில் கர்நாடகா
அரசு நீரைத் திறந்துவிடும் வரை அம்மாநில அரசு தாக்கல் செய்யும் எந்த மனு
மீதும் விசாரணை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தது. தண்ணீர்
திறக்காமல் இருக்க காலதாமதம் செய்யும் நோக்கில் கர்நாடக அரசு இதுபோன்ற
இடைக்கால மனுக்களை திட்டமிட்டு தாக்கல் செய்வதாக மனுவில் தமிழக அரசு
குற்றம் சாட்டியிருந்தது.
3 நாட்களுக்கு தண்ணீர்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6
ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவுடன் மத்திய அரசு பேசி சுமூகத் தீர்வு காணும் படி
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் தற்போது தர இயலாது என்ற கர்நாடக
அரசின் கோரிக்கையை உசச்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சுமூக உறவு
சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்
கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் நடவடிக்கை கூட்டாட்சி
தத்துவத்திற்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையே சுமுக உறவு இருக்க வேண்டும் என்றும் அறிவுரை
கூறியுள்ளது. தமிழக, கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய
அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாண்டியாவில் போராட்டம்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே கர்நாடகாவின் மாண்டியா
மாவட்டத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. விவசாயிகள் சாலைகளை மறித்து
போராடி வருவதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது. மைசூரு - பெங்களூரு
இடையேயான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பதற்றம்
அதிகரித்துள்ளது. மேலும், மைசூரு, மாண்டியா, ராம்நகர், ஹூப்ளி என பல
இடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும், மத்திய அரசு நெருக்கடி கொடுத்தாலும்
தமிழகத்திற்கு தண்ணீர் தர விடமாட்டோம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.
No comments:
Post a Comment