காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்ஸை நான் மறித்தால் என் மீது நாளையே குண்டாஸ் பாயும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். காவிரியில் இருந்து நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அங்கு சுமார் ஒரு வார காலமாக கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் லாரிகள் கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, "கர்நாடகத்தில் அவர்கள் எதையும் செய்யலாம். அதற்கு அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. நம்மிடம் அதிகாரம் இல்லை. மேலும் நாம் கர்நாடகத்திற்கு எதிராக பேசினால் வன்முறையாளர்கள் என்று சொல்கிறார்கள். கர்நாடகத்தில் இருந்து வரும் பஸ்ஸை இன்று நான் தடுத்து நிறுத்தினால் நாளையே என் மீது குண்டாஸ் பாயும்" என்று கூறினார். மேலும், காவிரி பாயும் 4 மாநில அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதுவதற்கு முன், நமது முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்க வேண்டும் என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment