சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் கேரளாவை கண்டித்து கோவை கொடீசியா மைதானத்தில், திமுக சார்பில் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். அணை கட்ட ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது தவறு. இதனால் கொங்கு மண்டலத்திலுள்ள விவசாயிகளுக்கு மட்டுமின்றி, குடிக்க கூட நீர் கிடைக்காது.
எனவேதான், சிறுவாணி பிரச்சினை குறித்து சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்தியது. இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதை அறிந்துதான், நேற்று, சிறுவாணி பிரச்சினையில், ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்தார். மக்கள் நலனுக்காக திமுக அதற்கு ஆதரவு அளித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற உதவியது. சோலைவனமாக இருக்கும் கொங்கு மண்டலம் பாலைவனமாகிவிடக் கூடாது. பிற மாநிலங்களில் பொது பிரச்சினைகளில் ஆளும்-எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. எனவே டெல்லிக்கு அனைத்து கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்து செல்லுங்கள் என தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்தேன்.
அதிமுக எம்பிக்கள், தமிழக நலன் குறித்து பேசாமல் நாடாளுமன்றத்தில், பஜனை பாடி வருகிறார்கள். காஷ்மீர்.. ப்யூட்டி ஃபுல் காஷ்மீர்.. என்று அதிமுக எம்.பி நாடாளுமன்றத்தில், பாடிக்கொண்டிருந்தார். மெத்தனமாக உள்ள தமிழக அரசை கண்டித்துதான் இன்று போராட்டம் நடத்துகிறோம். அதிமுக அரசு நினைத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், அமைச்சரோ, மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம் என்று காலம் தாழ்த்தும் நோக்கில்தான் பதில் அளித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இன்றைய போராட்டம். ஜெயலலிதா எந்த மாநிலத்துடனும் நல்ல உறவை பேணுவதில்லை. நீதிமன்றத்தில் வழக்கு போடக்கூடாது என்று திமுக ஒரு நாளும் சொல்லாது. ஆனாலும், அது கால தாமதமாகும் விஷயம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அண்டை மாநில முதல்வர்களோடு நல்ல உறவை வைத்திருந்தார். கருணாநிதியே நேரில் சென்று அண்டை மாநில முதல்வர்களை சந்தித்து தமிழக நலன் பற்றி பேசியுள்ளார்.
காவிரி, பாலாறு, சிறுவாணி என எந்த பிரச்சினையிலாவது அண்டை மாநில முதல்வர்களோடு ஜெயலலிதா பேசியுள்ளாரா.. தமிழக கட்சி பிரமுகர்களையாவது சந்தித்து பேசியுள்ளாரா.. விவசாய போராட்ட குழுக்களையாவது சந்தித்து பேசியுள்ளாரா.. முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட விவசாயிகளுக்கு என்றைக்காவது நேரம் கொடுக்கப்பட்டுள்ளதா.. கிடையாது! ஜெயலலிதா ஆட்சி நடத்துவது சுய நலத்திற்காக. அவருடன் இருக்கும் குடும்பம் நலனுக்காக. வசூல் செய்யும் அமைச்சர்களுக்காக ஒரு ஆட்சி நடத்துகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உடனே உச்சநீதிமன்றம் ஓடி சென்று தடையுத்தரவு பெற்ற ஜெயலலிதா, சிறுவாணி அணை கட்ட விடாமல் ஏன் தடுக்கவில்லை என்பதே எனது கேள்வி. இப்போராட்டம் இன்றோடு முடியாது. ஜெயலலிதா மெத்தனமாக இருந்தால், திமுகவின் போராட்டம் வேறு வகைகளில் தொடரும். இதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment