ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பர்ஷா கீமுது (7) உடல்நலக்குறைவால் மிதாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்காக ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவரும், அவருடைய மனைவியும் மகளை கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அச்சிறுமி இறந்து விட்டாள். அது தெரிந்தவுடன், ஆம்புலன்ஸ் டிரைவர், சிறுமியின் உடலுடன் கீழே இறங்குமாறு வற்புறுத்தினார். எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், இரக்கமில்லாத அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், இவர்களையும், சிறுமி உடலையும் கீழே தள்ளிவிட்டார். அழுது புரண்ட தினபந்துவும், அவருடைய மனைவியும் வேறு வழியின்றி மகளின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்ல முற்பட்டனர். தனியார் வாகனங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு பணமில்லை என்பதால், தினபந்து அவரது தோளிலேயே பர்ஷாவின் உடலை தூக்கி போட்டு அழுதபடி நடக்க தொடங்கினார்.
அழுகை அவரின் அருகேயே, அவரின் மனைவியும் அழுதபடி நடந்து சென்றார். பர்ஷா இறந்துவிட்ட சோகம் ஒருபக்கம் என்றால் அந்த சிறுமியின் உடலைகூட மரியாதையாக கொண்டு செல்ல முடியவில்லையே என்ற இயலாமை மறுபக்கம் என அந்த பெற்றோரை உருக்குலைத்து அழச் செய்தது.
6 கி.மீ நடை பர்ஷா, உடலை தோளில் சுமந்து கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கி சுமார் 6 கி.மீ தூரம் நடந்தனர். அப்போது, நடுவே ஒரு கிராமத்தில் சிலர் இதை பார்த்து விசாரித்தனர். உண்மை தெரிந்ததும், அரசு பிளாக் ஆபீசருக்கு தகவல் கொடுத்தனர்.
வேறு வாகனம் இதையடுத்து, வேறு வாகனத்தை வரவழைத்து உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் குறித்து டிரைவர் உள்பட 3 பேர் மீது மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.
கலெக்டர் கோபம் இதுகுறித்து, மல்கன்கிரி மாவட்ட கலெக்டர் சுதர்ஷன் சக்கரவர்த்தி கூறுகையில், ஆம்புலன்ஸ் டிரைவர், உடனிருந்த மருத்துவ பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். டிரைவர் செயல்பட்டவிதம் சட்ட விரோதம் என்று தெரிவித்தார்.
கொடூரம் மறக்கும் முன்பே.. 10 நாட்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு பெண்மணியின் சடலத்தை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் தரப்படததால், அந்த பெண்மணி கணவர், சடலத்தை 10 கி.மீ தூரம் தூக்கி சென்றார். அந்த படம் வைரலாகி நாடு முழுக்க கண்டனத்தை பெற்றது. இதையடுத்து இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடனடியாக துவக்கினார். ஆனால், இப்போது நடந்த சம்பவம் முழுக்க முழுக்க மனிதாபிமானமற்ற செயல் என்பதை மறுக்க முடியாது.
No comments:
Post a Comment