தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் வெறியில் சர்ச்சுக்குள் நுழைந்து ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொலை செய்த இளைஞர் சீகன் தப்பி ஓடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரான்சினா என்ற ஆசிரியை பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள சர்ச்சில் வழிபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் ஆசிரியை பிரான்சினாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் ஆசிரியை பிரான்சினா சம்பவ இடத்திலேயே அலறியபடி துடிதுடித்து மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பிரான்சினாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரான்சினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரான்சினாவுக்கு செப்டம்பர் 8-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இன்றுடன் பணியில் இருந்து நின்றுவிடவும் அவர் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில்தான் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரான்சினாவை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சீகன் என்பவர்தான்.... பிரான்சினாவை ஒருதலையாக காதலித்து வந்தார் சீகன்.
ஆனால் பிரான்சினாவுக்கு திருமணம் உறுதியானதால் தமக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்ற காட்டுமிரண்டித்தனமான வெறியால் படுகொலை செய்திருக்கிறார் சீகன். பிரான்சினாவை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சீகன், மணல் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் ஒருதலைக்காதல் சம்பவத்தில் நடக்கும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று கரூரில் கல்லூரியில் வகுப்பறையில் மாணவி ஒருவர் கட்டையால் அடித்துக்கொல்லப்பட்ட நிலையில் இன்று சர்ச்சில் பள்ளி ஆசிரியை பிரான்சினா வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment